சிங்கப்பெண்ணே! : சிரித்தவர்கள் முன் சாதிக்கவேண்டும்- தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு முன்னேறிய பெண் #CelebratingSGWomen
சிங்கப்பெண்ணே! : சிரித்தவர்கள் முன் சாதிக்கவேண்டும்- தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு முன்னேறிய பெண் #CelebratingSGWomen

படங்கள்: ஸ்டெப்பனி
பிரச்சினைகளைப் பார்த்து அஞ்சினால் அது நம்மை கோழையாக்கும், அதை எதிர்த்துப் போராடத் தயாரானால், அதுவே பாதி வெற்றிதான் என்கிறார் 51 வயது ஸ்டெப்பனி.
தையல், ஒப்பனை, நிழற்படம் என பல துறைகளில் அனுபவம் கொண்ட ஸ்டெப்பனி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தவர்.
தற்கொலை கோழைத்தனம், சிரித்தவர்கள் முன் ஜெயிப்பதே பலம் என்று எண்ணம் தோன்றவே எண்ணத்தை மாற்றிக்கொண்டார். மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவருகிறார்.
இந்தச் சிங்கப்பெண்ணின் கதையைக் கேட்போமா?
வசதி குறைவு - படிக்கப் பணமில்லை:
வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்தவர் ஸ்டெப்பனி.
பெற்றோர் இருவரும் அதிக நேரம் வேலையில் இருந்ததால் பாட்டியிடம் வளர்ந்தார்.
போதிய பண உதவி கிடைக்காததால், 18 வயதில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

எதிர்பாராத் திருப்பங்கள்:
மேற்படிப்பு இல்லாவிட்டாலும் ஏதேனும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
23 வயதில் திருமணம். 25 வயதில் இரு குழந்தைகளுக்குத் தாய்.
தமக்குப் பிடித்த தையல் வேலையின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார்.
வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருந்த போது கணவருடன் முறிவு.
33 வயதில் இரண்டு பிள்ளைகளை எப்படித் தனியாக வளர்ப்பது? கலக்கம் ஏற்பட்டது.

கடினமான காலக்கட்டம்:
மணமுறிவு ஸ்டெப்பனியை அதிகம் பாதித்தது.
குடும்பத்தினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லை; மேலும் உடைந்தார்.
வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.
சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாடி வரை சென்ற அவரை ஏதோ ஒன்று தடுத்தது.
சாதிக்கத்தான் வாழ்க்கை என்ற நம்பிக்கை மெல்ல மெல்லப் பிறந்தது. எண்ணத்தைக் கைவிட்டார்.

புதிய வாய்ப்பு:
காலை நேரத்தில் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார்; இரவில் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றார்.
2009ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார். லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ஒப்பனை மற்றும் தையல் கடைகளைத் திறந்தார்.
ஸ்டெப்பனியின் ஒப்பனைகள் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்தன; தொழில் மேம்படத் தொடங்கியது.
மீண்டும் நெருக்கடி :
இரண்டாவது கணவருடன் கருத்து வேறுபாடுகள் எழ, மீண்டும் மணமுறிவு.
அதிக போட்டி காரணமாக ஒப்பனைத் தொழிலையும் கைவிடவேண்டிய சூழல்.
மீண்டும் வாழ்க்கையில் நெருக்கடி.

திருப்புமுனை :
புதுத் திறன்களைக் கற்றுக்கொள்வதில் ஸ்டெப்பனிக்கு அதிக ஆர்வம் உண்டு. அது அவரைப் நிழற்படக் கலைஞராக மாற்றியது.
2012 ஆம் ஆண்டு வீராசாமி சாலையில் நிழற்படக் கடை ஒன்றை நண்பர் ஒருவருடன் இணைந்து வாடகைக்கு எடுத்தார். புதிய பாதையில் அடியெடுத்து வைத்தார்.
அடுத்த 8 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டார் ஸ்டெப்பனி.
பல சாவல்களைச் சமாளித்து முன்னேறிய அவர் தமது பிள்ளைகளை நன்றாகப் படிக்கவும் வைத்தார்.

கைகொடுத்த அனுபவம் :
தற்போது COVID-19 சூழலால் ஸ்டெப்பனியின் நிழற்படத் தொழிலில் சற்று தொய்வு.
இருப்பினும் அவருக்குப் பிடித்த, தெரிந்த ஒப்பனையும் தையலும் கைகொடுக்கின்றன.
வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று ஒப்பனை செய்துதருகிறார்.
அதே நேரத்தில் தையல் வேலைகளிலும் ஈடுபடுகிறார்.
இப்போது:
நம்பிக்கையையும் அனுபவத்தையும் மூலதனமாகக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் முன்னேறியவர் ஸ்டெப்பனி.
வாழ்க்கையில் தடுமாறுபவர்களுக்கு ஸ்டெப்பனி கூறுவது இதுவே.
முன்னேறிச் சென்றுகொண்டே இருங்கள்.... மெல்ல மெல்ல உங்கள் படிகள் வெற்றிப்படிகளாகும்.