வர்த்தக, வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்க காமன்வெல்த் நாடுகளுடன் சிங்கப்பூர் ஆலோசனை
படம்: MDDI
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் வர்த்தகச் செலவுகளைக் குறைக்கவும் வாழ்க்கைச் செலவைத் தணிக்கவும் மற்ற காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆராய்கிறது.
ஆன்டிகுவா - பார்புடாவில் (Antigua-Barbuda) நடைபெற்ற 4 நாள் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவில் துணைப் பிரதமர் கான் கிம் யொங் (Gan Kim Yong) ஒத்துழைப்புக்கான மற்ற வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார்.
காமன்வெல்த் அமைப்பின் 56 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்தனர்.
பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பொதுவான சவால்கள் குறித்து அவர்கள் கலந்துபேசினர்.
எரிசக்தி விலை போன்ற வெளிப்புறக் காரணங்களால் சில செலவுகள் அதிகரிப்பதைத் துணைப் பிரதமர் கான் சுட்டினார்.
உலக வர்த்தகக் கட்டமைப்பில் நிலவும் சிக்கல்களும் செலவுகளை அதிகரிப்பதாக அவர் சொன்னார்.
காமன்வெல்த் நாடுகள் வெவ்வேறு சவால்களையும் தேசிய நலன்களையும் கொண்டிருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இருப்பதாகத் திரு கான் கூறினார்.
மின்னிலக்கமயத்திலும் ஒத்துழைக்க வாய்ப்புள்ளது.
சிங்கப்பூர் அதன் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் காமன்வெல்த் நாடுகளின் சுமார் 30,000 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறது.
காமன்வெல்த் நாடுகளின் முன்னேற்றத்துக்கு உதவுவது சிங்கப்பூர் உட்பட அனைத்துத் தரப்புகளுக்கும் பயனளிக்கும் என்று திரு கான் கூறினார்.