இன நல்லிணக்கத்துக்கு சிங்கப்பூர் புதிய சட்டத்தை மட்டும் சார்ந்திருக்கவில்லை: அமைச்சர் சண்முகம்

(கோப்புப்படம்: இலக்கியா செல்வராஜி)
இன நல்லிணகத்தைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் புதிய சட்டத்தை மட்டும் சார்ந்து இருக்கவில்லை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரில் இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்திற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இன விவகாரங்களில் சமூக அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்துவதற்கும், கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அரசாங்கத்திற்கு இனி அதிகாரம் வழங்கப்படும்.
வெவ்வேறு இனத்தவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகச் சட்டப்படி கட்டாயப்படுத்த முடியாது, உணர்வுகளைத் தூண்டும் சூழல்கள் எழுவதையும் தடுக்க முடியாது என்றார் அமைச்சர் சண்முகம்.
பல்வேறு இனத்தவர்களுக்கு இடையே நல்லிணக்கத்தை நிலைநாட்ட பல காலமாக நடப்பில் இருக்கும் அரசாங்கக் கொள்கைகளும் கட்டமைப்புகளும் பங்காற்றும் என்றார் அவர்.
புதிய சட்டத்தின்கீழ் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குலமரபுச் சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டுத் தலையீட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன, சமய நல்லிணக்கத்தின் தொடர்பில் அமைச்சரவைக்கும் அதிபர் மன்றத்திற்கும் இடையில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால் அதிபர், கட்டுப்பாட்டு உத்தரவை உறுதிப்படுத்தலாம், ரத்துச் செய்யலாம் அல்லது மாற்றலாம்.
புதிய இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.