நேப்பாளத்துக்குக் கைகொடுத்த சிங்கப்பூர் அதிகாரிகள் - அவர்கள் எதிர்கொண்ட சவால்கள்
CNA/Ili Mansor
This audio is generated by an AI tool.
சேறு, சகதியில் ஊறிக்கிடந்த உடல் பாகங்கள்...
அழுகிய சடலங்கள்...
நேப்பாளத்துக்கு உதவச் சென்ற சிங்கப்பூர் அதிகாரிகள் அத்தகைய சவால்களை எதிர்கொண்டனர்.
பெருவெள்ளத்தில் காணாமல் போனோரை அடையாளம் காண காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் என 35 பேரைச் சிங்கப்பூர் நேப்பாளத்துக்கு அனுப்பியது.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை இடம்பெற்ற Operation Vanguard நடவடிக்கைக்காக அவர்கள் பகுதி பகுதியாக நேப்பாளத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இன்று அவர்கள் நாடு திரும்பினர்.
பிடோக் HomeTeamNS வளாகத்தில் அவர்களுக்கு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) அதிகாரிகளைப் பாராட்டினார்.
தேவையுள்ள நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டச் சிங்கப்பூர் தயாராக இருப்பதை அதிகாரிகள் எடுத்துக்காட்டியதாக அவர் புகழ்ந்தார்.
அதிகாரிகள் எத்தகைய சவால்களை எதிர்நோக்கினர்?
நேப்பாளத்தில் அதிகாரிகள் பிரேதப் பரிசோதனை, விரல் ரேகையைச் சேகரிப்பது, சடலங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதே பெரும் சவாலாய் இருந்ததாக அதிகாரி ஒருவர் பகிர்ந்தார். அது கடுமையான உடல், மனவுளைச்சலைக் கொடுத்ததாக அவர் சொன்னார்.
இருப்பினும் அதிகாரிகள் மனம் தளராமல் உழைத்தனர் என்றார் அவர்.
உடல்களிலிருந்து விரல் ரேகையைச் சேகரிப்பதும் சிரமமாக இருந்தது என்றனர் அதிகாரிகள்.
அதனால் பல சடலங்களை உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என்று தடயவியல் நிபுணர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வது சிரமமாய் இருந்ததால் அங்குள்ள சேதத்தை ஆராய சிங்கப்பூர் அதிகாரிகள் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தினர்.
காற்றுப் பலமாக வீசியதால் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவதும் சிக்கலாக இருந்தது.
ஆனால் அந்தச் சவாலை மீறி வானூர்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நேப்பாள அதிகாரிகளுக்குச் சிங்கப்பூர் அதிகாரிகள் கற்றுக்கொடுத்தனர்.