Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முத்திரைபதித்த முன்னோடிகள்: சிங்கப்பூர்த் துறைமுக வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய கோவிந்தசாமிச் செட்டியார்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் துறைமுகத்தின் பங்கு இன்றியமையாதது. ஆனால் அந்தத் துறைமுகத்தின் வளர்ச்சியில் ஓர் இந்தியரின் அளப்பரிய பங்கு இருந்தது பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் துறைமுகத்தின் பங்கு இன்றியமையாதது. ஆனால் அந்தத் துறைமுகத்தின் வளர்ச்சியில் ஓர் இந்தியரின் அளப்பரிய பங்கு இருந்தது பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?

அவர்தான் கொடைவள்ளல் கோவிந்தசாமிச் செட்டியார். 1906ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி சிங்கப்பூருக்கு வந்தார் திரு. கோவிந்தசாமி. சிங்கப்பூர்த் துறைமுக வாரியத்தின் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். படிப்படியாக துறைமுக நிர்வாகத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டார்.

யூசுப் சராங் என்ற முதலாளியிடம் உத்திபூர்வமாகத் திட்டமிடுவது, வள நிர்வாகம் போன்ற தொழில் நுணுக்கங்களை அறிந்துகொண்டார். துறைமுகத்திற்குத் தேவையான தொழிலாளர்களை வழங்கும் குத்தகையாளராகவும் விளங்கினார்.

10 ஆண்டுகள் கழித்து அவர் தமிழ்த் தொழிலாளர் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நிர்வகிப்பதிலும் அவர்களின் நலனிலும் கவனம் செலுத்தியது. 

சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்தவர்களுக்கு வசிப்பிடம் வழங்கினார். அவரின் கொட்டகையில் அவர்கள் தங்கினர். 'கொட்டகை' என்ற சொல் காலப்போக்கில் மருவி 'கொட்டாய்' என்றாகி, அவரின் பெயருடன் அடைமொழியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர்த் துறைமுக வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய கோவிந்தசாமிச் செட்டியார்

தொழிலாளர்களின் பசியைப் போக்க கூடாரம் ஒன்றை எழுப்பி அவர்களுக்கு உணவு வழங்கினார்.

சமூகம், சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்குத் திரு. கோவிந்தசாமி ஆற்றிய பங்கிற்காக சமாதான நீதிமானாக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நீண்ட காலம் அறங்காவலராகச் சேவையாற்றினார் திரு கோவிந்தசாமி. ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் அவர் கொண்டுவந்த வழக்கங்களைப் பக்தர்கள் இன்றளவும் பின்பற்றிவருகின்றனர்.

1948ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். பிரம்மாண்டமாக நடைபெற்ற அவரின் இறுதிச்சடங்கில் 5,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், சிங்கப்பூர்த் துறைமுக வாரியம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது.

காலஞ்சென்ற கோவிந்தசாமிச் செட்டியார் வரலாற்றில் முத்திரை பதித்த மாமனிதர் என்று கூறினால் அது மிகையாகாது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்