Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் - ஏற்றுக்கொண்டது நாடாளுமன்றம்

வாசிப்புநேரம் -

செயற்கை நுண்ணறிவு உருமாற்றத்துக்கிடையே ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அந்தத் தீர்மானத்தை முன்வைத்தது.

அதுகுறித்துக் கடந்த இரண்டு நாள்களாக 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.

செயற்கை நுண்ணறிவு ஊழியர்களின் வருங்காலத்தையும் வாழ்வாதாரத்தையும் நிச்சயமற்றதாக்கியுள்ளது; இருந்தபோதும் எந்தவொரு சிங்கப்பூரரும் தவிக்கும் நிலை ஏற்படாது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் உறுதியளித்தார்.

மாறாகச் செயற்கை நுண்ணறிவுப் பயணத்தில் சிங்கப்பூரர்களுடன் இணைந்து பயணம் செய்யும் வகையில் அந்த மாற்றம் அமையும் என்றார் அவர்.

அனைவரையும் உள்ளடக்கிய, வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கக்கூடியதாக அந்த உருமாற்றம் நாட்டில் அமையுமென டாக்டர் டான் கூறினார்.

அரசாங்கம், நிறுவனங்கள், சங்கங்கள் முதலியன இணைந்து பணியாற்றவுள்ளன. செயற்கை நுண்ணறிவின்மூலம் நல்ல வேலைகளை உருவாக்கி, ஒவ்வொரு சிங்கப்பூரரின் எதிர்காலத்தையும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவால் இதுவரை ஊழியர்கள் வேலையிழந்ததாக எவ்விதத் தகவலும் பதிவாகவில்லை என்று மனிதவள அமைச்சு கூறியது.

அது சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களின் வேலையை மேம்படுத்தியுள்ளதே தவிர ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கவில்லை என்பதைக் காட்டுவதாக டாக்டர் டான் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்