சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூரில் மே என்றாலே வெப்பமா? என்ன காரணம்?

படம்: Calvin Oh
2016 ஆம் ஆண்டிலிருந்து சென்ற (2024) ஆண்டு வரை வெப்பநிலை சராசரியாக 28 டிகிரி செல்ஸியசுக்கு மேல் பதிவானது.
சிங்கப்பூர் வானிலை ஆய்வகத்தின் இணையத்தளத்திலுள்ள தரவுகள் அதைக் காட்டுகின்றன.

மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் சில நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சிங்கப்பூரில் தெற்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் பெய்த கனத்த மழையால் சில இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டது. ஏப்ரல் மாதக் கடைசி இரு வாரங்களில் பெரும்பாலான நாள்களில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்தது.
ஆனால் தற்போது நண்பகல் நேரத்தில் வெளியே சென்றுவர சிலர் யோசிக்கின்றனர்.
கடுமையான வெயிலின் தாக்கத்தை உணர முடிவதாகவும் வியர்த்துக் கொட்டுவதாகவும் 'செய்தி'யிடம் பேசிய சிலர் தெரிவித்தனர்.
மே மாதத்தில் வெயிலும் வெப்பமும் சிங்கப்பூரில் வழக்கம்போலத்தான் இருக்கிறதா?
முனைவர். நா. வெங்கடராமனிடம் விவரம் கேட்டது 'செய்தி'.
இந்த ஆண்டு சிங்கப்பூரில் சராசரியைவிட சற்று கூடுதலான வெப்பம் நீடிப்பதாகக் கூறினார் அவர்.
"இந்த ஆண்டு சிங்கப்பூரின் வானிலை சற்று வெப்பமாக இருக்கும். பெரும்பாலான நாள்களில் அன்றாட வெப்பநிலை பகலில் 34இல் இருந்து 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்" என்று அவர் சொன்னார்.
இரவிலும் வெப்பம்.....
இரவு நேரங்களிலும் பலர் அதிக வெப்பத்தை உணர்கின்றனர். 23இல் இருந்து 25 டிகிரி செல்ஸியஸை விடக் குறையாமலிருப்பது அதற்கு காரணம் என்றார் அவர்.
மே என்றாலே வெப்பமா?
"சிங்கப்பூர் வானிலையைப் பொறுத்தவரை மே மாதம் வெப்பமானதகவே இருந்துவருகிறது. எனவே இந்த ஆண்டும் வெப்பத்தை அதிகம் உணர்வது புதிதல்ல. பருவமழை தொடங்குவதற்கு முன் வெப்பம் அதிகரிப்பது வழக்கமே" என்று திரு வெங்கடராமன் சொன்னார்.