Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பதவியேற்புச் சடங்கு விருந்துக்கு வடை தயாரித்து வழங்கிய இந்தியர் - "உணவங்காடித் தொழிலுக்கு ஊக்கமளிக்கிறது"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் தமக்கும் ஒரு பங்கு இருந்ததை எண்ணிப் பெருமைப்படுவதாகக் கூறினார் Sky Lab Cooked Food கடையின் உரிமையாளர் திரு. மோகன ராஜ்.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமர் திரு. லாரன்ஸ் வோங் பதவியேற்ற அந்த முக்கியமானத் தருணத்தைக் கண் குளிரக் கண்டது மறக்க முடியாத அனுபவம் என்றார் அவர்.

இஸ்தானாவில் நேற்று (15 மே) நடைபெற்ற பதவியேற்புச் சடங்கு விருந்து உபசரிப்பில் உணவு வழங்கிய ஒரே இந்திய உணவங்காடி என்ற பெருமை Sky Lab Cooked Food கடையைச் சேரும்.
(படம்: மோகன ராஜ்)
விருந்து உபசரிப்பில் இறால் வடை, மசாலா வடை, சமோசா ஆகிய இந்திய உணவுவகைகளைக் கடை தயாரித்து வழங்கியது.

அந்த வாய்ப்பு, கடைக்குப் பெரிய அங்கீகாரம் என்றார் 'செய்தி'யிடம் பேசிய திரு. மோகன ராஜ்.
(படம்: மோகன ராஜ்)
பணி எப்போது துவங்கியது?

விருந்து உபசரிப்புக்குத் தயார் செய்யும் பணிகள் பல வாரங்களுக்கு முன்னரே துவங்கின.

தேக்கா நிலையத்தில் அமைந்திருக்கும் கடையின் தூய்மைத் தரத்தை உறுதிசெய்ய சிங்கப்பூர் உணவு அமைப்பு ஒவ்வொரு வாரமும் சோதனை நடத்தியது.
 
(படம்: மோகன ராஜ்)
ஆனால் ஊழியரக்ளுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை; அதிகாரிகள் அவர்களுடன் நண்பர்களைப் போல உரையாடிக்கொண்டிருந்ததாகச் சொன்னார் திரு. மோகன ராஜ்.

விருந்துக்கு உணவைத் தயாரிக்கும்போது கடுமையான நெறிமுறைகள் அவசியம் என்பதை ஊழியர்களும் புரிந்துகொண்டதாக அவர் கூறினார்.
(படம்: மோகன ராஜ்)
உணவங்காடிக் கலாசாரத்துக்கு ஊக்கம்

சிங்கப்பூரில் உணவங்காடிக் கலாசாரம் அழிந்துவரும் வேளையில், சிறப்பு நிகழ்வுகளில் உணவங்காடி உணவுகளை வழங்குவது மிக முக்கியமான முயற்சி என்றார் திரு. மோகன ராஜ்.

"நான் நான்காம் தலைமுறை உணவங்காடிக்காரர். இந்த வேலையில் நீண்ட நேரம் உழைக்கவேண்டும், வேலை முன்னேற்றம் விரைவில் கிடைக்காது. அதனால் எனது தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்கள் இந்தத் தொழிலைச் செய்ய முன்வருவதில்லை," என்றார் 32 வயது திரு. மோகன ராஜ்.
(படம்: மோகன ராஜ்)
நாட்டின் முக்கிய நிகழ்வுகளில் உணவங்காடி உணவுகள் வழங்கப்படும்போது இளம் தலைமுறையினர் அந்தத் தொழிலின் மீது நம்பிக்கை கொள்வர். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றார் அவர்.
(படம்: மோகன ராஜ்)
சிங்கப்பூரின் தனித்துவமான உணவங்காடிக் கலாசாரத்தைப் பேணிக் காக்கவும் அது வழியமைக்கிறது என்றார் திரு. மோகன ராஜ்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்