Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'வீட்டில் புகைபிடிப்போர் புரிந்துணர்வுடனும், சமூகப் பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டும்'

அடுக்குமாடி வீடுகளின் மாடங்களிலும் சன்னல் அருகிலும் புகைபிடிப்பதைத் தடை செய்யுமாறு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் நாடாளுமன்றக் குழுவை வழிநடத்தும் திரு. லூயிஸ் இங் (Louis Ng) அண்மையில் நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தார்.

வாசிப்புநேரம் -

அடுக்குமாடி வீடுகளின் மாடங்களிலும் சன்னல் அருகிலும் புகைபிடிப்பதைத் தடை செய்யுமாறு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் நாடாளுமன்றக் குழுவை வழிநடத்தும் திரு. லூயிஸ் இங் (Louis Ng) அண்மையில் நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தார்.

புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் அந்தப் பரிந்துரை முன்மொழியப்பட்டது. அதுகுறித்துப் பொதுமக்களின் கருத்துகளை 'செய்தி' அறிந்து வந்தது.

அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஒருசிலரது பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் சிக்கல் ஏற்படாது. உதாரணத்துக்கு இரைச்சல் ஏற்படுத்துதல்கூட மற்றவர்களுக்குத் தொந்தரவுதான்.வீடுகளுக்குள் புகைபிடிப்போர் அந்த அறை பக்கத்து வீடுகளுக்கு மிக அருகில் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்துகொண்டால் நல்லது.

- ரோஷன், ஓட்டுநர்

படம்: AFP/Oscar Siagian

புகையைச் சுவாசிப்போருக்குப் பல பாதிப்புகள் ஏற்படலாம்.

எனது குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.


சிகரெட் புகையை அவர்கள் அடிக்கடி சுவாசித்தால் அது ஆபத்தாக அமையலாம். அந்தப் புகையின் துர்நாற்றம் அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் தலைவலியை உண்டாக்கும்

- தீபா, மாணவர்

சிலர் வீட்டில் புகைபிடிக்கும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினர். 

மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிப்பறையிலோ காலியான அறையிலோ புகைபிடிக்கலாம். புகைபிடிப்போர் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்வது மிகவும் முக்கியம்

- நவீன், துப்புரவுச் சேவை வழங்குநர்

( படம்:  PIXABAY )

COVID- 19 சூழலில் வீட்டில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளதாகச் சிலர் தெரிவித்தனர்.

வீட்டில் அதிக நேரம் இருக்கும்போது அடிக்கடி புகைபிடிக்கும் போக்கும் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் அதனால் பாதிக்கப்படக்கூடும். பொது இடங்களில் புகைபிடிப்பதற்குக் குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை மஞ்சள் கோட்டால் வரையறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அங்கு சென்று புகைபிடிக்கலாம். எப்போதும் அங்கு போக வேண்டும் என்றல்ல; முடிந்தவரை வீட்டில் புகைபிடிப்பதை அவர்கள் தவிர்க்கலாம்.

- நஸ்ரி, பல்கலைக்கழக மாணவர்

மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீட்டில் புகைபிடிப்போருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுப்பது சிரமம் என்றும் புகையைச் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்றும் 'செய்தி'இடம் பேசிய சிலர் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் 'Second Hand smoking ' ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதன்மூலம் புகைபிடிக்கும் பழக்கத்தில் ஈடுபடுவோர் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளக்கூடும். சன்னல் ஓரம் புகைபிடிப்பதற்குப் பதிலாக அவர்கள் கழிப்பறைக்குச் சென்று புகைபிடிக்கலாம். புகைபிடிப்போர் தாமாக முன்வந்து அவ்வாறு செய்ய வேண்டும். 

என்றார் நஸ்ரி.

(படம்:AFP/Eric Feferberg)

குடியிருப்புப் பகுதிகளில் புகை பிடிப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்து மும்முனை அணுகுமுறை கையாளப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்களிடையே சமூகப் பொறுப்புணர்வை அதிகரித்தல், அண்டைவீட்டுக்காரர்கள் சிக்கல்களை பேசித் தீர்த்துக்கொள்ள உதவும் கூடுதல் வழிமுறைகளைக் கண்டறிதல், அத்தகைய பிரச்சினைகளை மேம்பட்ட முறையில் கையாள்வது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளுதல் ஆகிய வழிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (Amy Khor) தெரிவித்தார்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்