Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இயற்கையின் அற்புதங்களை வெளிக்கொணரும் ‘Home’ இசைத் தொகுப்பு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இயற்கைக்கு எதிரான மனிதர்களின் நடவடிக்கைகளைக் களைய வித்தியாசமாகக் கர்நாடக இசை வழி முயற்சி எடுத்திருக்கிறார், உள்ளூர்க் கலைஞர் சுஷ்மா சோமா.

2020ஆம் ஆண்டு தேசிய இளையர் மன்றத்தின் ஆக உயரிய விருதான இளங்கலைஞர் விருதைப் பெற்ற அவர், அமெரிக்காவைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் ஆதித்திய பிரகாஷுடன் இணைந்து 'Home' எனும் இசைத்தொகுப்பைப் வெளியிடவிருக்கிறார்.

இன்று (8 ஏப்ரல்) வெளியிடப்படவிருக்கும் அவர்களது இசைத்தொகுப்பு இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்.

இயற்கையில் ஒரு மனிதராக நம் பங்கு என்ன, இயற்கையுடனான நம்முடைய தொடர்பு என்ன என்பதை ஆராயும் வகையில் இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம்." என்றார் குமாரி சுஷ்மா.

கருப்பொருள்

நமது வாழ்க்கையை வண்ணமயமாக்குவதும் அழகுபடுத்துவதும் இயற்கை என்கிறார் குமாரி சுஷ்மா.

“நான் அதிகம் நேசிக்கும் இயற்கை, நமது தினசரி நடவடிக்கைகளாலும் முடிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தேன். இயற்கையை நோக்கிய என்னுடைய உணர்வுகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்க 'Home' இசைத்தொகுப்பை உருவாக்கினேன். ” என்றார் அவர்.

இசைத்தொகுப்பின் மூலம், இயற்கைக்கு எதிரான செயல்கள் குறித்து மக்களைச் சிந்திக்கவும் பேசவும் தூண்டுவது இவரது நோக்கம்.

“என் உணர்வுகளுடன் தொடர்புடைய ஓர் அம்சத்தைப் பற்றி மக்கள் ஓர் உரையாடலை மற்றவர்களுடன் தொடங்கலாம். அது இயற்கையைப் பாதுகாப்பது குறித்த உரையாடலாக மாறலாம். அவ்வாறு நடந்தால் அதையே இந்த இசைத்தொகுப்பின் வெற்றியாகக் கருதுவேன்”

ஏன் கர்நாடக இசை?

30 வருடங்களாகக் கர்நாடக இசையைப் பயிலும் குமாரி சுஷ்மா, இசைத்தொகுப்பிலும் அதை அடிப்படையாகக் கொள்ள எண்ணினார்.

கர்நாடக இசை போன்ற ஒரு பாரம்பரியக் கலையைத் தளமாக்கொண்டும் எண்ணங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்வைக் ஏற்படுத்தமுடியும் - இதை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த சுஷ்மா விரும்புகிறார்.

“ நீங்கள் கற்றுக்கொள்ளும் கலையில் நம்பிக்கை வைத்துச் செய்வதற்குப் பல நடவடிக்கைகள் உள்ளன. என்னுடைய இந்த இசைத்தொகுப்பு மற்ற கலைஞர்களையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் ” என்கிறார் இவர்.

இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘Nature’ என்ற பாடல், BBC தொலைக்காட்சி நிறுவனத்தின் EarthShot விருதுகள் எனும் அனைத்துலகச் சுற்றுப்புற விருது நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.

‘Home’ இசைத்தொகுப்பை அனைத்து இசைப்பதிவுத் தளங்கள் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்