சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
3D அச்சிடும் தொழில்நுட்பம், சத்துணவு, உணவு வடிவமைப்பு... மூன்றும் கலந்த இளையர்களுக்கான போட்டி

சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் Armstrong நிறுவனமும் இணைந்து உணவுத் துறையில் முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படலாம் என்பதை எடுத்துரைக்க போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சத்துணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்யும் நாட்டின் திட்டத்திற்கேற்ப நீடித்த, நிலைத்தன்மையை ஊக்குவிப்பது போட்டியின் நோக்கம்.
போட்டியில் உணவுக் கழிவுகளைக் கொண்டு ஆகப் புத்தாக்கமிக்க, சுவையான உணவு வகைகளைப் பங்கேற்பாளர்கள் உருவாக்கவேண்டும்.
இருவர் கொண்ட 6 குழுக்கள் இன்றைய இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.
போட்டியாளர்களில் ஒருவர் விக்டோரியா தொடக்கக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தேவஸரேஷ்தா.
அவருடைய அணியின் படைப்பு தொடக்கக்கல்லூரிப் பிரிவில் முதல் பரிசை வென்றது.
சில காய்கறி வகைகளைக் கொண்டு உணவைத் தயாரித்து வடிவமைத்தோம். உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி உணவை வடிவமைப்பது எளிமையாக இருந்தது - அதில் நார்ச்சத்து அதிகமாக இருந்ததால் மிகச்சுலபமாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டது. கீரை வகைகளைக் கொண்டு உணவை வடிவமைப்பது சற்றுக் கடினமாக இருந்தது
என்று தேவஸ்ரேஷ்தா போட்டியில் இடம்பெற்ற சில சுற்றுகளைப் பற்றிச் சொன்னார்.
உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. உணவுக்காக நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கிறோம். அதை முடிந்த அளவில் தவிர்ப்பது எப்படி என்பதை நான் இந்தப் போட்டியின்மூலம் கற்றுக்கொண்டேன்
என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்தார் அவர்.
போட்டியின் தொடர்பில் முப்பரிமாண அச்சிடல் குறித்த பயிலரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றியும் உணவுக் கழிவைக் குறைப்பது பற்றியும் மேம்பட்ட புரிதலைப் பெற்றதாக தேவஸரேஷ்தா கூறினார்.