சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஈராண்டுகளுக்குப்பின் களைகட்டும் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

(படம்: Sandeep Kr Yadav/Unsplash)
ஈராண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் புத்தாண்டைக் குதூகலமாக வரவேற்க மக்களும் கடைக்காரர்களும் ஆவலாக உள்ளனர்.
அண்மையில் தளர்த்தப்பட்ட COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாண்டின் கொண்டாட்டம் மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைகளுக்குக் கூடுதலானோர் சென்று கொண்டிருக்கின்றனர். பூக்கள் வாங்குவது, பூஜைக்கான பொருள்கள் வாங்குவது எனப் பலர் கடைகளில் கூடுகின்றனர்.

அதுகுறித்து அறிய சில கடைக்காரர்களுடன் 'செய்தி' பேசியது.
பூ வியாபாரம் காலை முதல் நன்கு சூடு பிடித்திருப்பதாகச் சொன்னார் ஓம் சக்தி பூக்கடையின் உரிமையாளர்.
"எப்போதும்போல அதேவகைப் பூக்கள்தான் வரவழைக்கப்படுகின்றன; என்றபோதும் இந்த ஆண்டு முன்கூட்டியே செய்யப்பட்ட பதிவுகளால் பன்மடங்கு அதிக அளவில் பூக்களை வரவழைத்திருக்கிறோம்."
என்றார் அவர்.
பூ, மாலைகள், இலைகள் இவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என்று கணித்து சுமார் 4 மடங்கு அதிகமாக அவற்றை வரவழைத்திருப்பதாக ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை கூறியது.
நேற்றுவரை வியாபாரம் மந்தமாகவே இருந்ததாகவும் இன்று காலை முதல் அதிகமானோர் வந்து பொருள்கள் வாங்கிச் செல்வதாகவும் கடையின் நிர்வாகி திரு அண்ணாதுரை கூறினார்.

பொதுவாக மக்கள் கரும்பு, தேங்காய், பூ, பழங்கள் ஆகியவற்றை அதிகம் வாங்குவர். அதனால் அவற்றைப் போதுமான அளவு மலேசியாவிலிருந்து தருவித்திருப்பதாய் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் நிலைமையைக் கணிக்க முடியவில்லை என்றார் அவர்.
தேவையைக் கணிப்பதில் சிரமம்
ஈராண்டுகளாக மக்கள் புத்தாண்டை முன்னிட்டு அதிகமாகப் பொருள்களை வாங்கவில்லை என்பதால் இவ்வாண்டு தேவையைக் கணிப்பது கடைகளுக்குச் சிரமமாக உள்ளது.
இருப்பினும் சிறிய கடைகளுக்குத் திடீரென அதிகரிக்கும் தேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள மனிதவளம் மிகப்பெரிய தடையாக உள்ளது.

"மாலைகளுக்கு ஏராளமான முன்பதிவுகள் வந்துள்ளன. இருப்பினும் மாலை கட்டுவதற்கு, பூக்கட்டுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அது இத்தகைய சிறப்பான நாள்களில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது."
என்று ஓம் சக்தி பூக்கடை சொன்னது.
மற்றொரு புறம் புத்தாண்டு வழிபாட்டுக்கு ஆலயங்கள் தயாராகிவருகின்றன.
ஆலயங்களில்..
யீஷூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பூஜைக்கும் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"கடந்த ஈராண்டுகளைவிட இவ்வாண்டு கூடுதலானோருக்கு கோயிலைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். 250 பேர் வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். வியாழனன்று குறைந்தது 700 பேர் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்"
என்று ஆலயத்தின் செயலாளர் திரு அண்ணாதுரை அழகப்பன் கூறினார்.

கடந்த ஆண்டுகளில் ஒரு நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி, ஆலயத்தைச் சுற்றிவர முடியாது போன்ற கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன.
பாதுகாப்புக்கும் முக்கியத்துவம்
தற்போது அத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் SafeEntry நடைமுறையும் முகக்கவசம் அணியும் கட்டாயமும் பின்பற்றப்படும் எனத் திரு அண்ணாதுரை தெரிவித்தார்.
எந்தவொரு நேரத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள ஆலயங்களும் வர்த்தகங்களும் தயார்நிலையில் உள்ளன.
புத்தாண்டு தொடங்கி இனிவரும் பண்டிகைக் காலங்களில் ஈராண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைக் காணமுடியும் என்று 'செய்தி'-இடம் பேசிய பலர் தெரிவித்தனர்.