முத்திரைபதித்த முன்னோடிகள்: தென்கிழக்காசியாவின் ஒரே தமிழ் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கியவர்
தென்கிழக்காசியாவின் ஒரே தமிழ் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கியவர் திரு. அ. நா. மெய்தீன்.

படங்கள்: மு அ மசூது
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
தென்கிழக்காசியாவின் ஒரே தமிழ் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கியவர் திரு. அ. நா. மெய்தீன்.

1920இல் அவர் இந்தியாவின் கடையநல்லூரில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தார். அப்போது அவருக்கு 7 வயது.
திரு. மெய்தீன் தம் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஓர் ஊழியராக இருந்தார்.
ஆனால் வாழ்க்கையில் தாம் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர் இரவுப் பள்ளியில் படித்தார்.

இரவுப் பள்ளியில் பயில்பவர்கள் சிரமப்பட்டு படிப்பதைக் கவனித்த அவர் ஒரு பள்ளியைத் தொடங்க முடிவெடுத்தார்.
கடையநல்லூர் சங்கத்தின் இல்லத்திலேயே ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார்.

அப்போது அந்தப் பள்ளியில் 54 மாணவர்கள் மட்டும்தான் பயின்றனர்.
மாணவர்களுக்கு முறையான பள்ளி வசதிகள் வேண்டும் என்று திரு. மெய்தீன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன் விளைவாக உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி மெக்ஸ்வெல் ரோட்டில் உருவெடுத்தது.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு வந்ததால் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டது.
பள்ளிக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானியத்தொகை, பள்ளியிலிருந்த இருப்புத் தொகை அனைத்தும் கொண்டு உமறுப்புலவர் கல்வி அறநிதி தொடங்கப்பட்டது.

இன்றும் அதன் வழியாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.
1983இல் செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்த் தொடக்கப்பள்ளிக்கு 'உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்' என்று பெயர் சூட்டப்பட்டது.
அதன்வழி, திரு. மெய்தீன் தொடங்கி வைத்த உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் பெயர் தொடர்ந்து நீடித்துவருகிறது.