Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

டாக்சி, தனியார் வாடகைக் கார் கிடைப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமம்? காரணங்களை எடுத்துரைக்கும் ஓட்டுநர்கள்

வாசிப்புநேரம் -

ஓரிடத்துக்குச் செல்ல நேரமாகிவிட்டது...

உடனடியாகக் கைத்தொலைபேசியில் உள்ள டாக்சி, தனியார் வாடகைக் கார் செயலிகளைத் திறந்து பார்க்கிறீர்கள்...

'இங்கு செல்வதற்கு இவ்வளவு விலையா?' என்று எண்ணிக் கார் கிடைப்பதற்குக் காத்திருக்கிறீர்கள்...ஒரு காரும் கிடைக்கவில்லை...

பழகிப்போன சூழலாக இது உள்ளதா? 

சிங்கப்பூரில் டாக்சி, தனியார் வாடகைக் கார் முன்பதிவுச் சேவைகள் குறித்துப் பயனீட்டாளர்களிடையே குறைகூறல்கள் எழுந்துள்ளன.

டாக்சி, தனியார் வாடகைக் கார் கிடைப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமம்? ஓட்டுநர்களே விளக்கம் அளித்தனர்...

Ili Nadhirah Mansor/TODAY

டாக்சிகள், தனியார் வாடகைக் கார்கள் ஆகிய சேவைகளுக்குத்  தேவை அதிகரித்துள்ளது...ஓட்டுநர்கள் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் இல்லை.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி ஓட்டுநர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு குறைந்துள்ளது.

வேலையைவிட்டு விலகிய ஓட்டுநர்கள்

கிருமித்தொற்றுச் சூழலில் பயணிகள் அவ்வளவாக இல்லாததால் ஓட்டுநர்கள் சிலர் வேலையைவிட்டு விலகிவிட்டதாக ஓட்டுநர்களிடமிருந்து செய்தி அறிந்தது.

“நான் கிருமித்தொற்றுச் சூழல் தொடங்கி சுமார் 7 மாதங்கள்வரை பணியாற்றினேன். பயணிகளே இல்லை. நான் முழுநேர வேலைமீது கவனம் செலுத்திவிட்டேன்,”

என்று தனியார் வாடகைக் கார் ஓட்டுநராகப் பணியாற்றிய திரு சரவணன் சொன்னார்.

படம்: TODAY

எரிபொருள் விலை அதிகரிப்பையும் கார்களுக்கான வாடகையையும் சமாளிக்கமுடியவில்லை என்றும் ஓட்டுநர்கள் கூறினர்.

“என்னதான் நாள் முழுவதும் வேலைசெய்தாலும் வருமானம் வாடகையைச் செலுத்தவே போதுமானதாக உள்ளது. வாடகையில் ஒரு பகுதி தள்ளுபடி செய்யப்பட்டாலும் ஓட்டுநர்கள் பலருக்கு அது கட்டுப்படியாக இல்லை,” என்று 10 ஆண்டுகளாக டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றும் திரு ராமலிங்கம் கூறினார்.

அதிகரித்த விலைகள்

கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

சேவைகளுக்கான தேவை அதிகரித்ததால் சேவைக் கட்டணங்களும் கூடின. 

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு தனியார் வாடகைக் கார் நிறுவனங்கள் அறிவித்த கட்டண உயர்வும் அதற்குப் பங்களித்தது.

“விலைகள் அதிகரித்ததால் பயணிகள் சிலர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலை முறைக்குப் பதிலாக மீட்டர் முறையில் நிர்ணயிக்கப்படும் விலை நடைமுறையை நாடினர்.  அது டாக்சிகளுக்கான தேவையை மேலும் அதிகரித்திருக்கலாம் ,” என்று 36 ஆண்டுகளாக டாக்சி ஓட்டும் திரு நாதன் சொன்னார்.

(படம்: CNA)

வழக்கநிலை திரும்புமா?

டாக்சி, தனியார் வாடகைக் கார் நிறுவனங்களும் புதிய ஓட்டுநர்களை ஈர்க்கத் திட்டங்களை அறிவித்துள்ளன. 

“பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதும் அந்த நடவடிக்கைகளில் ஒன்று.  வாடிக்கையாளர்களின் அக்கறைகள் விரைவில் தணியலாம். அதுவரை வாடிக்கையாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவதுதான் சிறப்பு,”

என்று 4 ஆண்டுகளாகத் தனியார் வாடகைக் கார் ஓட்டுநராகப் பணியாற்றும் திரு ராமமூர்த்தி கூறினார்.

(படம்: Nuria Ling/TODAY)

இந்நிலையில் பயணிகள் என்ன செய்யலாம்? ஓட்டுநர்கள் பரிந்துரைப்பது இதோ..

  • பொதுப் போக்குவரத்தை நாடலாம்
  • முன்கூட்டியே காருக்கு முன்பதிவு செய்ய நேரம் ஒதுக்கலாம்
  • இன்னொருவருடன் இணைந்து காரைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடலாம்

நினைத்த நேரத்தில் டாக்சியையோ தனியார் வாடகைக் காரையோ எடுப்பது சிரமமாக இருக்கலாம்..ஆனால் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டால் நினைத்த இடங்களுக்கு நேரத்தோடு செல்லமுடியும்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்