Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தண்ணீர், குடை, தைலம், முகக்கவசம் இன்னும் பல...டாக்சியா? நடமாடும் குட்டிக் கடையா?

வாசிப்புநேரம் -
டாக்சி அனுபவம்...அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

அப்படி ஓர் அனுபவம் அண்மையில் 'செய்தி'க்கும் கிடைத்தது.

இது 17 ஆண்டுகளாக டாக்சி ஓட்டும் திரு ஓங் சுவீ கேர் (Ong Swee Kher) எனும் சிங்கப்பூரரின் கதை.

வாடிக்கையாளர்களுக்காகத் தண்ணீர் போத்தல், பிஸ்கட், குடை, தைலம், முகக்கவசம் என்று பல்வேறு பொருள்களை டாக்சியில் வைத்திருக்கிறார் 70 வயது திரு ஓங்.

அள்ள அள்ளக் குறையாத பொருள்களைப் பார்த்தால் அவரது டாக்சியை நடமாடும் குட்டிக் கடை என்றே சொல்லத் தோன்றுகிறது.

'செய்தி'யிடம் பேசினார் திரு ஓங்.
 
(படம்: ஓங் சுவீ கேர்)
"2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் இளையர் ஒலிம்பிக் போட்டியின்போது கார் ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வாடிக்கையாளர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். அதனை 14 ஆண்டாகப் பின்பற்றி வருகிறேன்" என்றார்.

ஏதேனும் பொருள்கள் தீர்ந்துவிட்டால் அதனை உடனே வாங்கி வைப்பது வழக்கம் என்றார் திரு ஓங். அதற்காக மாதத்துக்குச் சுமார் 100 வெள்ளி வரை செலவிடுகிறார்.

"ஒரு நாளில் ஆக அதிகமாக வாடிக்கையாளர்களுக்கு 15 தண்ணீர் போத்தல்கள் கொடுத்துள்ளேன். சிலர் மனம் நெகிழ்ந்து நன்றி கூறுவார்கள்"

என்றார் திரு ஓங். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் ஆதரவாக இருக்கின்றனர்.

மழை நேரங்களில் சில வாடிக்கையாளர்களுக்குத் குடைகள் கொடுத்து உதவுவதாகச் சொன்னார்.

"இதுவரை வாடிக்கையாளர்களுக்குச் சுமார் 1,000 குடைகள் கொடுத்துள்ளேன். ஒரு குடையின் விலை 5 முதல் 7 வெள்ளி."

"வாழ்நாளில் இப்படியொரு டாக்சியில் ஏறியதே இல்லை என்று சிலர் கூறும்போது இந்தச் செலவுகள் எல்லாம் பாரமாகத் தெரியாது" என்கிறார் இவர்.
 
(படம்: ஓங் சுவீ கேர்)
திரு ஓங்கின் சேவையைப் பாராட்டி அவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்