Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பல்லைக் கடித்துக்கொண்டுச் செலவுகளைச் சமாளிக்கிறோம்" - வாடகை வீட்டில் இருப்போரின் மனக்குமுறல்

வாசிப்புநேரம் -

பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருள் சேவை வரி அதிகரிப்பு - இவற்றுக்கு மத்தியில் வீட்டு வாடகையும் அதிகரித்துள்ளது.

மற்ற செலவுகளை ஓரளவு குறைத்துக் கொள்ளலாம்; ஆனால் வீட்டு வாடகையால் சம்பளத்தின் பெரும்பகுதி கரைந்துவிடுகிறது என்று ஆதங்கப்படும் சிலரிடம் பேசியது 'செய்தி'.

"வாடகை அதிகரித்துள்ளதால் எண்ணிலடங்காச் சிக்கல்கள்," என்கிறார் இந்தியாவிலிருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் பிரசாந்த்.

4 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் வசிக்கும் இவர், தற்போது ஒரு வீட்டில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

"4 வருடங்களுக்கு முன்பு ஓர் அறையின் வாடகை 640 வெள்ளி. இப்போது 800 வெள்ளி. அதனால் இன்னொருவருடன் சேர்ந்து தங்க வேண்டியுள்ளது. வசதியாக இல்லை. வாடகையைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்கிறது," என ஆதங்கத்துடன் சொன்னார் பிரசாந்த்.

அண்டை நாடான மலேசியாவிலிருந்து இங்கு வந்து பணிபுரிவோரும் இதே ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

பல்லைக் கடித்துக்கொண்டுச் செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது என்றார் மலேசியரான ரிதா. 

யிஷுனில் (Yishun) ஓர் அறையை வாடகைக்கு எடுத்திருக்கும் அவர் சமைக்க, துவைக்கக் கூட முடிவதில்லை என்று வருந்தினார். பல செலவுகளைக் குறைத்துக் கொண்டாலும்.....

"வாடகையால் மாதச் சேமிப்பு குறைவாகவே உள்ளது," என உணர்ச்சி பொங்கச் சொன்னார்.

வாடகையைச் சமாளிக்க முடியாத சில மலேசியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறவும் முடிவுக்குக் கூட வந்துவிட்டனர்.

சிங்கப்பூரில் 25 ஆண்டுகளாக வசித்துவந்தவர் சுரேஷ். வாடகை உச்சத்தைத் தொட்டதால் கடந்த மாதம் மலேசியாவின் ஜொகூர் பாருவுக்குத் திரும்பிவிட்டார்.

அன்றாடம் 3 மணி நேரம் பயணம் செய்து வேலைக்கு வருகிறார்.

"4 அறை வீட்டின் வாடகை 2,200 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளிக்கு அதிகரித்துவிட்டது.

கட்டுப்படியாகவில்லை...அதனால் ஜொகூர் பாருவிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். ஆனால் வாழ்க்கைத் தரம் குறைந்துவிட்டது."

"பயணம், உணவு, வீடு, போக்குவரத்து - இவை ஒரு மனிதனின் அடிப்படை தேவைகள். ஒன்றைச் சமாளிக்க மற்றொன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை," என வருந்தினார் சுரேஷ்.

வாடகை உயர்வு வெளிநாட்டினரை மட்டுமல்லாமல் BTO எனப்படும் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்காகக் காத்திருப்போரையும் அதிகம் பாதித்துள்ளது.

மறுவிற்பனை அல்லது BTO வீடு வாங்க நினைக்கும் பெட்ரினாவும் ஆண்டுரூவும் வீண் செலவாக வாடகை கட்டுவது குறித்து வருந்தினர்.

"வீட்டுக்குப் பணம் கட்டினால் அது சொந்தமாகும். இது வெறும் செலவாக உள்ளது," என்றார் பெட்ரினா.

வட்டி விகிதங்கள் கூடுவதால் வாடகை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்கின்றனர் சொத்து முகவர்கள்.

Singapore Realtors Inc Website

8 மாதங்களாகக் கூடும் வாடகை, விரைவில் குறைய வாய்ப்பில்லை என்றார் sri_private limitedஇல் பணிபுரியும் சொத்து முகவர் ராமா.

வெளியூரிலிருந்து வரும் ஊழியர்கள், இங்கு படிக்க வரும் மாணவர்கள் ஆகியோரால் வாடகை வீட்டுக்குத் தேவை அதிகரிக்கக்கூடும்.

ஆகையால் வாடகை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை கூடினாலும் வாடகை குறைவதற்கான சாத்தியம் தென்படவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்