அதிபர் தர்மனுக்கு இந்தியாவில் சடங்குபூர்வ வரவேற்பு

இந்தியப் பயணம் மேற்கொண்டிருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு இன்று சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
பலமுறை இந்தியா சென்றுள்ள திரு தர்மன் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொண்டுள்ள முதல் பயணம் அது.
புதுடில்லியில் இருக்கும் செய்தியாளர் மீனா ஆறுமுகம் அதன் தொடர்பிலான விவரங்களைத் தந்தார்.
விண் அதிரும் குண்டு முழக்கத்துடன் அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு தொடங்கியது.
இந்திய அதிபர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் திரு தர்மனை வரவேற்றனர்.
இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
அடுத்து இந்திய ராணுவம், ஆகாயப் படை, கடற்படை ஆகியவற்றின் மரியாதை அணிவகுப்புகளும் இடம்பெற்றன.
ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய திரு தர்மன் இந்தியாவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள உறவு ஒரு புதிய அதிவேகப் பாதையில் செல்லவிருப்பதாய்ச் சொன்னார்.
திரு தர்மன் இன்று ராஜ் காட் சென்று இந்தியாவின் தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரது பயணத்தை ஒட்டி அமைச்சர்களின் இருதரப்புச் சந்திப்புகளும் இடம்பெறும்.
திரு தர்மன் இன்றிரவு இந்திய அதிபர் வழங்கும் சிறப்பு விருந்தில் கலந்துகொள்வார்.