மறைந்து வரும் பாரம்பரியத் தொழில்கள்- சலவைத் தொழிலைத் தொடரும் தமிழ்க் குடும்பம்
சிங்கப்பூரின் டோபி காட் பகுதி ஒரு காலத்தில் சலவைத் தொழிலுக்குப் பெயர் பெற்றிருந்தது. 1970களில் சுமார் 30 சலவைக் கடைகள் அங்கு இயங்கி வந்ததகாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் டோபி காட் பகுதி ஒரு காலத்தில் சலவைத் தொழிலுக்குப் பெயர் பெற்றிருந்தது. 1970களில் சுமார் 30 சலவைக் கடைகள் அங்கு இயங்கி வந்ததகாகக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், துணிகள் கைகளால் அடித்துத் துவைக்கப்பட்டு அக்கம்பக்கத் திடல்களில் உலர்த்தப்பட்டன.

காலவோட்டத்தில் பற்பல மாற்றங்களைக் கண்ட சலவைத் தொழில், தற்போது சிங்கப்பூரில் நவீன முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், இன்னமும் பாரம்பரிய அம்சங்கள் சிலவற்றைக் கைவிடாமல் சலவைத் தொழிலைத் தொடர்கிறது ஒரு தமிழ்க் குடும்பம்.
புளோக் 3 செயிண்ட் ஜார்ஜஸ் ரோட்டில் (St George's Road) இயங்கி வருகிறது ப.சுப்பையா சலவை நிலையம்.
சுமார் 50 ஆண்டு காலமாகக் குடும்பத்தினர் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமுறைகள் தாண்டித் தொடர்கிறது இந்தப் பாரம்பரியத் தொழில்.

புடவை, வேட்டி, சட்டை போன்ற இந்தியத் துணி வகைகளைச் சலவைச் செய்ய வாடிக்கையாளர்கள் இவர்களை நாடுகின்றனர்.
அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே வகை இஸ்திரிப் பெட்டி இன்னும் அங்கு பயன்படுத்தப்படுகிறது.
அது 1980களில் அதிகமாக சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பெட்டி.
தற்போது அதைச் சந்தையில் காண்பது அரிது.

அழுத்தம் அதிகம் தேவைப்பட்டாலும், ஆடையில் உள்ள சுருக்கத்தைப் போக்க அந்தக் கனமான இஸ்திரிப் பெட்டி உதவுவதாக கடை உரிமையாளர் திரு. அறிவழகன் தெரிவித்தார்.
முன்னர், துணிகள் சலவைக் கல்லில் அடித்துத் துவைக்கப்பட்டுத் திடலில் காயவைக்கப்பட்டன. ஆனால் தற்போது துணிகள் சலவை இயந்திரங்களில் போடப்படுகின்றன.
இருப்பினும் அவற்றைக் கொடிகளில் காற்றில் உலர வைக்கும் வழக்கம் இங்கு தொடர்கிறது.

நின்றுகொண்டே வேலை செய்ய வேண்டும்... கைகளை அழுந்தப் பயன்படுத்தவேண்டும்.....அதிக உடலுழைப்புத் தேவை....இந்தக் காரணங்களால் ஊழியர்களைப் பணியமர்த்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறார் திரு. அறிவழகன்.
இன்றைய இளைய தலைமுறையினர் இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் காட்டவில்லை என்று வருத்தமாகக் கூறுகிறார் இவர்.
எதிர்காலத்தில் சலவைத் தொழிலைக் கைவிட்டு கடையை மூடும் சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
சலவைத் தொழில் குறித்த மேலும் சில சுவாரஸ்யமான விவரங்களைத் திரு. அறிவழகன் 'செய்தி' உடன் பகிர்ந்துகொண்டார்.