சிலேத்தார் விரைவுச் சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்த கனரக வாகனம்
படம்: SGRV FRONT MAN/Facebook
இன்று (16 பிப்ரவரி) காலை சிலேத்தார் விரைவுச் சாலையில் கனரக வாகனம் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிலிருந்த 39 வயது ஆண் பயணி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
சிலேத்தார் விரைவுச் சாலையின் அப்பர் தாம்சன் ரோட்டுப் பகுதியில் காலை 8 மணிவாக்கில் விபத்து நேர்ந்ததாகப் காவல்துறை 8world செய்தியிடம் கூறியது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் மழை பெய்த காட்சிகளும் சாலையின் நடுவில் கனரக வாகனம் கவிழ்ந்துகிடந்த காட்சிகளும் காணொளி ஒன்றில் பதிவாகின.
கனரக வாகனத்திற்கு அருகே வெள்ளைக் கார் ஒன்றும் அதற்குப் பின்னால் போக்குவரத்துக் காவல்துறையின் மோட்டார்சைக்கிள்களும் அவசர மருத்துவ உதவி வாகனமும் காணப்பட்டன.
விபத்து ஏற்பட்ட சாலையின் முதல் இரண்டு தடங்களைத் தவிர்க்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
குடிமைத் தற்காப்புப் படை, கனரக வாகனத்தில் இருந்த பயணியை கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.