உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் இடம் மாறுகிறது
(படம்: கீர்த்திகா பெருமாள்)
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய இடத்தில் செயல்படவிருக்கிறது.
1 விக்டோரியா லேனில் ஸ்டாம்ஃபோர்ட் (Stamford) தொடக்கப்பள்ளி இருந்த வளாகத்துக்கு அது மாற்றப்படுமென தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் தினேஷ் வாசு தாஸ் அறிவித்தார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் வருடாந்திர விருது நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சரான திரு தினேஷ் கலந்துகொண்டார்.
தற்போது 2 பீட்டி ரோட்டில் இருக்கும் நிலையத்தின் குத்தகைக்காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
அதனைக் கருத்தில்கொண்டு நிலையம் புதிய இடத்துக்கு மாற்றப்படுவதாகத் தெரிகிறது.
1 விக்டோரியா லேனிற்கு மாற்றப்படும்போது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் வளாகம் மேலும் பெரிதாக இருக்கும்.
மாணவர்களுக்குப் பெரிய வகுப்பறைகளையும் விளையாட்டு வசதிகளையும் அமைக்கமுடியும் என்று திரு தினேஷ் வாசு தாஸ் சொன்னார்.
புதிய இடத்தில் நிலையம் இந்தியச் சமூகத்துடன் மேலும் நெருக்கமாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்திய மரபுடைமை நிலையம், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஆகிய அமைப்புகளும் இந்தியக் கலை, கலாசார வட்டாரமும் அருகிலேயே இருப்பதை அவர் சுட்டினார்.