Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தயக்கமின்றி, பயமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்' - ஊக்குவிக்கும் மூத்தோர்

சிங்கப்பூரில் இன்னும் பல மூத்தோர் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் இன்னும் பல மூத்தோர் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

அவர்களை ஊக்குவிக்க, அரசாங்கம் பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோர், பதிவு செய்யாமலேயே தடுப்பூசி போடும் நிலையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

நிலையத்திற்குச் செல்ல முடியாதோருக்கு, அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் சேவைகளும் உண்டு.

ஆனாலும், முதியோர் சிலரிடம் தடுப்பூசி குறித்த தயக்கம் தொடர்ந்து நிலவுகிறது.

அத்தகைய தயக்கமே தேவையில்லை என்கிறார் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட திரு. அப்துல் கஃபூர்.

"COVID-19 நோய்த்தொற்றிலிருந்து எதிர்ப்பு சக்தி பெறுவதற்காகத் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்."

"தடுப்பூசி போடுவதற்கு முன், அது குறித்த அச்சமோ, கவலையோ எனக்கு இல்லை. போட்ட பின்பும், வலி எதுவும் கிடையாது. சற்று காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதுவும், மாத்திரை எடுத்துக்கொண்ட பின் சரியாகிவிட்டது."

என்றார் 81 வயதாகும் திரு. கஃபூர்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட திருமதி மேனகாவும் கிருமித்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் தான், தாம் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறினார்.

"COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் இருந்தது. தயக்கமில்லை."

"மேலும், தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், வெளிநாடுகளுக்கும் பயமின்றிப் போகலாம் என்ற நம்பிக்கை உள்ளது."

என்று 71 வயது திருமதி மேனகா தெரிவித்தார்.

அப்படி, தடுப்பூசி போட்ட பின் உடல் நலமில்லை என்றாலும், பிரச்சினை இல்லை என்கிறார் 72 வயது திருமதி லெட்சுமி.

"எனக்கு இதயப் பிரச்சினை இருக்கிறது. இரண்டாவது தடுப்பூசி போட்ட பிறகு, சில நாள்களுக்கு இதயம் வேகமாகத் துடித்தது. காய்ச்சலும் வந்தது. ஆனால், அதை எல்லாம் நான் பொருட்படுத்தவில்லை."

என்றார் அவர்.

சில நாள்களுக்குப் பின், உடல்நலம் தேறியதாகவும், நிறையப் பேரைத் தாமே தடுப்பூசி போடுவதற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 64 வயது திருமதி மாலா, தொடக்கத்தில் தடுப்பூசி போடுவதில் விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டார்.

"என் மகள் கூட என்னைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றார். ஆனால், என் வேலையிடத்தில் அனைவரும் போட்டுவிட்டனர். வானொலியிலும், தடுப்பூசி போட்டுக்கொண்டால், வெளிநாடுகளுக்குப் பயமின்றி செல்லலாம் எனக் கூறப்பட்டது. "

அதனால், மனம் மாறியதாக அவர் சொன்னார்.

"முதல் தடுப்பூசி போட்ட பின்பு, உடல் சற்று அசௌகரியமாக இருந்தது. ஆனால், இரண்டாவது தடுப்பூசிக்குப் பின், எதுவும் பிரச்சினை இல்லை."

என்றார் திருமதி மாலா.

இவர்கள் மற்றவர்களுக்குச் சொல்வது?

"தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் நல்லது. வயதான காலத்தில் தைரியமாக வெளியே செல்ல முடிகிறது. அதனால் தயக்கம் வேண்டாம்!" 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்