Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பிறவியிலிருந்தே பார்வையில்லை; ஆனால் அது குறையே இல்லை" - பல மொழிகளில் பாடும் சிங்கப்பூர் இளையர்

வாசிப்புநேரம் -
பிறவியிலிருந்தே பார்வை இல்லை...

ஆனால் அது ஒரு குறையே இல்லை என்கிறார் சிங்கப்பூரர் க்ரிஷம் சந்த்ரு மிர்புரி (Grishm Chandru Mirpuri).

இசையும் இசைக் கருவிகளும்தான் அதற்குக் காரணம் என்கிறார் அவர்.

தமது இசை உலகப் பயணம் குறித்து 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார் 17 வயது க்ரிஷம்.

பாடத் தொடங்கியது?

"3 வயதில் பாடல்களைக் கேட்டு முணுமுணுக்கத் தொடங்கினேன். எனக்கு இசை மீது ஆர்வம் இருப்பதை என் அம்மா அப்போது உணர்ந்தார். அதற்கான பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தார். முதலில் கோயிலில் பஜனைப் பாடல்கள் பாடினேன். பிறகு தனிப் பாடல்களைப் பாடிப் பழக அதுவே ஊக்கமாய் அமைந்தது. அங்கிருந்து பாடும் திறனை மெல்ல வளர்த்துக்கொண்டேன்" என்றார் க்ரிஷம்.

சவால்கள்?

"பார்வையில்லாததால் பாடல் வரிகளைப் பிரேய்ல் (Braille) முறைக்கு மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. பெற்றோர் உதவியதால் அந்த வேலை எளிதானது".

 
3ஆம் படிவத்தில் இசையை 'ஓ' நிலைப் பாடமாகப் படிக்க எண்ணினேன். அதற்காக ஆறே மாதத்தில் பிரேய்ல் இசை முறையைக் கற்றுக்கொண்டேன். flat.io எனும் செயலி வழி இசையமைக்கும் திறனையும் பழகினேன்".
பல மொழிகளில் பாடும் திறன்....

"தெலுங்கு, சீன மொழி எனப் பல மொழிகளில் பாடுவது முதலில் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் உதவியதால் அவற்றைக் கற்றுக்கொண்டேன்."


 
மாண்டரின் மொழியில் "Yuèliang Dàibiǎo Wǒ de Xīn" (The Moon Represents My Heart) எனும் பாடலை 2019ஆம் ஆண்டு SGEnable நிகழ்ச்சியில் பாடினேன். மிகப் பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று".
இசைக்கருவிகள் பற்றி?

"பியானோ, தபேலா, ஹார்மோனியம் ஆகிய கருவிகளை வாசிப்பேன். அவற்றில் தபேலா எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல்களைப் பாடிக்கொண்டே அதனை வாசிக்கும்போது ஒருவகை திருப்தி கிடைக்கும்" என்று க்ரிஷம் சொன்னார்.

திறனை மேலும் வளர்த்துக்கொள்ள 2015ஆம் ஆண்டு The Purple Symphony குழுவில் சேர்ந்தார் க்ரிஷம். அதன்வழி உடற்குறையுற்றோருக்கான ஆசியான் ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் தனிப்பாடகர்களில் ஒருவராகத் தெரிவானார். 2017ஆம் ஆண்டு 'சிங்கை நாடு' எனும் பாடலைப் பாட அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

 
"2017இல் The Purple Symphony குழுவுடன் இணைந்து தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றதை இன்றுவரை மறக்க முடியாது. மிதவையில் இருந்து நிகழ்ச்சியைப் படைத்தேன். நாட்டுக்கு என்னால் முடிந்ததைச் செய்யக் கிடைத்த வாய்ப்பாக அதனைக் கருதுகிறேன்."
 
"பார்வையில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. விடாமல் முயற்சி செய்ய வேண்டும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள முனைய வேண்டும்"
என்பதை வலியுறுத்தினார் க்ரிஷம்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்