Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ITE மாணவர்களின் அசத்தலான திட்டங்கள் - அனைத்துலக அரங்கில்!

வாசிப்புநேரம் -

"முதியவர்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை மோசடிகளில் பறிகொடுக்கின்றனர். அதைத் தடுக்க ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தோம், அதில் உதித்த திட்டம் இது," என்று உற்சாகம் பொங்கக் கூறினார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மாணவி ஜெயா ஐஷ்வரியா ஹுசேன்.
 

முதியோரை மோசடிகளிலிருந்து பாதுகாக்க வரையப்பட்ட 'Super Seniors' எனும் திட்டத்தை ஜெயா தமது குழுவுடன் ஹாங்காங்கில் இடம்பெற்ற VTC-ITE அனைத்துலக மாணவர் மாநாட்டில் படைத்தார்.

(படம்: ஜெயா)
சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ஹாங்காங்கின் தொழிற்பயிற்சி கழகம் (Vocational Training Council), Shenzhen
பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றிலிருந்து சுமார் 620 மாணவர்கள் மாநாட்டில் பங்கெடுத்தனர்.

ஹாங்காங்கில் சென்ற மாதம் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாநாடு நடைபெற்றது.
(படம்: ஜெயா)
முதியவர்களை மோசடியிலிருந்து காக்கும் திட்டம்

மோசடிகள் எப்படி நடக்கின்றன, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பனவற்றை முதியோருக்குக் கற்றுத்தர ஜெயாவும் அவரது குழுவினரும் 'Super Seniors' எனும் படக்காட்சி ஒன்றைத் தயாரித்தனர்.

முதியவர்கள் அதை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் படக்காட்சி, சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளிலும், ஹாக்கியென் (Hokkien), தியோசூ (Teochew) ஆகிய கிளைமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
(படம்: ஜெயா)
முக்கியமாக மோசடிகளைத் தடுக்கும் ScamShield செயலியை எப்படிப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது என்பதை முதியவர்கள் அறிந்துகொள்ள அது வகைசெய்தது.
(படம்: அபிலாயணன்)
இளையர்களின் மனவுறுதியை வலுப்படுத்தும் திட்டம்

இளையர்கள் எதிர்நோக்கும் மன உளைச்சலைச் சமாளிக்கும் உத்திகளைக் கொண்ட பயிற்சியைத் தமது குழுவுடன் தயாரித்தார் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் அபிலாயணன் மதிவாணன்.

17க்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பல இளையர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைக் கையாள 'Mind Fortify' எனும் பயிற்சி வரையப்பட்டது.
(படம்: அபிலாயணன்)
திட்டத்தின்போது குழுக்களாக அமர்ந்திருக்கும் இளையர்களுக்கு மனத்தளவில் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்த 7 உறுதிமொழிகள் வழங்கப்படும்.

ஒவ்வோர் உறுதிமொழி குறித்து அவர்கள் குழுவாகத் தேநீர் அருந்திக்கொண்டே கலந்துரையாடுவார்கள். அதை மாணவ ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வழிநடத்துவார்.

தேநீருக்கு மனதை அமைதிப்படுத்தும் தன்மை இருப்பதால் அது மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதாக அபிலாயணன் 'செய்தி'யிடம் கூறினார்.
(படம்: அபிலாயணன்)
2 மணி நேரம் நீடிக்கும் பயிற்சியில் மன உளைச்சலைச் சமாளிக்கும் வழிகளும் மனநலத்தை மெருகூட்டும் உத்திகளும் கலந்துரையாடப்படும்.

அதன் பின் பயிற்சியில் வழங்கப்பட்ட பயிற்சித்திட்டங்களும் 7 விதமான தேநீரும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்துகொண்ட சுமார் 40 இளையர்கள், மனவுறுதியை வளர்த்துக்கொள்ளும் வழிகளை அறிந்து நிம்மதி அடைந்ததாகக் கருத்துத் தெரிவித்தனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்