Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"நேரம் இல்லை என்பது உண்மை இல்லை!" - நேரத்தை ஒதுக்கி சில முதியவர்களின் வாழ்வில் வெளிச்சம் தந்தவர்

வாசிப்புநேரம் -

முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் தனிமையில் இருப்பதால் அவர்களது உடல், மன நலம் பாதிப்படைவதற்கு வாய்ப்பு அதிகம்.

அவர்களுடன் அடிக்கடிப் பேசிப் பழகச் சில தொண்டூழியர்கள் முன்வருவதால் அத்தகைய முதியவர்களில் பலரும் தனிமையில் வாடாமல் இருக்கின்றனர். 

Mr Siva

அத்தகைய தொண்டூழியர்களில் ஒருவர் 48 வயதுத் திரு வரதராஜன் சிவானந்தன். திரு சிவா 2018ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர்ப் பராமரிப்பு இல்லத்தில் தமது தொண்டூழிய அறப்பணியைத் தொடங்கினார். 

முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தொண்டூழியராகச் சேர்வதற்கு எனக்கு விருப்பமாக இருந்தது. தொண்டூழியம் என்பது அனைவரின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருப்பது மிக முக்கியம்

என்கிறார் அவர்.

ஒவ்வொரு வாரயிறுதியிலும் அவர் அங்குச் சென்று அங்கிருக்கும் முதியவர்களிடம் பேசிப் பழகி அவர்கள் மீது அன்பு காட்டியுள்ளார். 

நேரம் இல்லை எனச் சொல்வது ஒரு மனநிலை - தொண்டூழியத்தில் ஈடுபட சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே நாளுக்கு 4 மணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்... அதனால் என் வாழ்க்கையில் தொண்டூழியம் செய்வதால் எந்தத் தடங்கலும் ஏற்படுவதில்லை

என்று விளக்கினார் திரு சிவா. 

2020ஆம் ஆண்டிலிருந்து கிருமிப்பரவல் சூழலால் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வருகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

கிருமிப்பரவல் சூழலில் முதியவர்களுடன் பழக முடியாமல் போனதில் ஒருவித இணைப்பு நீங்கியது போல் உணர்ந்தேன்

என்று திரு சிவா தொண்டூழியப் பயணத்தில் சந்தித்த சவால் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

zoom

இருப்பினும் அவர் தளராமல் முதியவர்களுக்கு இணையச் சந்திப்பின் மூலம் 2 வாரங்களுக்கு ஒரு முறை யோகாசனப் பயிற்சிவகுப்புகளை நடத்தினார். 

meditate

வகுப்புகளின் மூலம் அவர்களுக்குச் சரிவர மூச்சு விடுவது, சோர்விலிருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகள் போன்றவற்றைக் கற்பித்தார். 

திரு சிவாவின் உன்னதச் சேவையை அங்கீகரிக்க ஸ்ரீ நாராயண மிஷன் அவரை WeCare விருதுக்கு நியமித்தது. வடமேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் அவருக்கு அந்த விருதை வழங்கியது. 

wecare

என் வாழ்வில் இதுபோன்ற விருதை நான் இதற்கு முன்பு பெற்றதில்லை

என்று கூறும் திரு சிவா, அவரை நியமித்த முதியோர்ப் பராமரிப்பு இல்லத்துக்கு நன்றி தெரிவித்தார். 

பிறருக்கு உதவும் மனப்பக்குவம் இயல்பாகவே மனிதர்களிடையே உள்ளது. அதற்கு நேரத்தை ஒதுக்கி முழுவீச்சில் இறங்கும்போது ஒருவித மனநிறைவு ஏற்படும் என்பதை உணர்த்தும் முன்னுதாரணமாகத் திரு சிவா விளங்குகிறார். 

உணர்வோம், உதவுவோம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்