Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

வீட்டில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் யாவை? எப்படித் தீச்சம்பவங்களைத் தவிர்ப்பது?

வாசிப்புநேரம் -

அண்மையில் பிடோக்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் தீச்சம்பவம் ஏற்பட்டதில் மூவர் மாண்டனர்.

அந்த வீட்டில் combustible, அதாவது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் நிறைய இருந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியிருந்தது. 

எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் யாவை? தீச்சம்பவங்களை எப்படித் தவிர்ப்பது?

FALCON தீப் பாதுகாப்பு அமைப்பு நிறுவனத்திடம் இவற்றைக் கேட்டறிந்தது 'செய்தி'...

வீடுகளில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் யாவை?

"செய்தித்தாள்கள், மரச் சாமான்கள், பிளாஸ்டிக், ரப்பர், பேப்பர், கழிப்பறைச் சுத்திகரிப்பான்கள், மாவு, நகப் பூச்சு..."

ஆகியவை எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் என்றது FALCON.

தீச் சம்பவங்களிலிருந்து வீட்டைப் பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

வீட்டுக் கூடத்தில் புகை குறித்த ஒலி-எழுப்பியையும் சமையலறையில் வெப்பம் குறித்த ஒலி-எழுப்பியையும் பொருத்திக்கொள்ளலாம்.

நெருப்பைவிட அதிலிருந்து வெளியாகும் புகைதான் ஆபத்தானது; கொல்லக்கூடியது என்று FALCON நிறுவனம் கூறியது.

புகை ஒலி-எழுப்பிதான் நெருப்பின் முதல் அறிகுறிகளைக் கண்டறியக்கூடியது. தீ குறித்து வீட்டில் இருப்போருக்கு அது எச்சரிக்கை விடுக்கும்.

சில வேளைகளில் தீச்சம்பவத்தின்போது தூங்கிக்கொண்டிருப்போர் புகையைச் சுவாசித்து மாண்டுபோவதாக FALCON நிறுவனம் குறிப்பிட்டது.

அது முன்வைத்த சில ஆலோசனைகள்:

  • இயங்கக்கூடிய நிலையில் இருக்கும் தீயணைப்புக் கருவிகளை வீட்டில் வைத்திருக்கலாம்.
  • இரவு முழுவதும் மின் சாதனங்களுக்கு மின்னூட்டம் செய்வதைத் தவிர்க்கலாம்.
  • வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைப்பதைத் தவிர்க்கலாம்.
  • எதிர்பாரா தீச்சம்பவத்தின்போது எப்படி வீட்டைவிட்டு வெளியேறுவது என்பதைத் திட்டமிட்டு அதைப் பயிற்சி செய்துபார்க்கலாம்.

சிங்கப்பூரில் தீச் சம்பவங்கள்...

பிள்ளைகள் நெருப்புடன் விளையாடுவதாலும் சமைத்துக்கொண்டிருக்கும்போது அதைக் கவனிக்காமல் வேறொரு செயலில் ஈடுபடுவதாலும்தான் சிங்கப்பூரில் பல தீச் சம்பவங்கள் ஏற்படுவதாக Ohana Fire Services நிறுவனம் கூறியது.

"சமைத்துக்கொண்டிருக்கும்போது நெருப்பைத் தணிவாக வைத்திருந்தால் ஆபத்தில்லை என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது பாதுகாப்பானது அல்ல. அடுப்பை கவனிக்காமல் விட்டுச் செல்வது ஆபத்து"

என்று அந்நிறுவனம் தெரிவித்தது.


தீப் பாதுகாப்புக் கருவிகளின் விற்பனை அண்மையில் அதிகரித்துள்ளதா?

அவற்றின் விற்பனை அண்மையில் சுமார் 400 விழுக்காடு அதிகரித்துள்ளதாக FALCON நிறுவனம் குறிப்பிட்டது.

தீப் பாதுகாப்புக் கருவிகள், சேவைகள் ஆகியவை குறித்து விசாரிப்போரின் எண்ணிக்கையும் ஏறத்தாழ 500 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அது சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்