வீட்டுக் கடன் - HDB அல்லது வங்கி எது சிறந்தது?
(கோப்புப் படம்: TODAY)
அந்த மாற்றம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 2.6 விழுக்காட்டை விட வங்கிகள் தற்போது இன்னும் குறைவான வட்டி தருகின்றன.
மாறிவிடலாமா என்று யாருக்குமே ஆசை வரும்.
பலரும் கடன் மாற்றம் (refinance) செய்வதில் ஆர்வம் செலுத்தி வருவதாக வீட்டு முகவர் கணேசன் சொல்கிறார்.
🏢 வீட்டுக் கடன் மாற்றம் என்றால் என்ன?
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் கடன் பெற்றவர்கள் எஞ்சிய தொகையை விருப்பப்பட்ட வங்கியிடம் மாற்றிக்கொள்ளலாம்.
அதேபோல வீட்டை வாங்கும்போது வங்கிக் கடன் பெற்றவர்கள், lock-in period எனச் சொல்லப்படும் குறைந்தபட்சக் கட்டண அவகாசம் முடிந்த பிறகு எஞ்சிய கடன் தொகையை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Instagram-இல் 'செய்தி' நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 60 விழுக்காட்டினர் கழகத்திடம் பெற்ற கடனை வங்கிக் கடனாக மாற்றியதில்லை எனத் தெரிவித்தனர்.
🏢 வீட்டுக் கடன் மாற்றம் யார் செய்யலாம்?
✅ குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தை முடித்தவர்கள்
✅ வங்கி நிபந்தனைகளில் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்ச தொகையும் எஞ்சிய வீட்டுக் கடன் தொகையும் ஒரே தொகையாக இருக்கவேண்டும். அல்லது எஞ்சிய வீட்டுக் கடன் தொகை கூடுதலாக இருக்கவேண்டும்.
வங்கியின் வட்டி கழகத்தின் வட்டி விகிதத்தைவிட குறைவாக இருக்கும்போது அதில் சேமிப்பு பெறலாம்.
🖩 உதாரணம்:
💲வீட்டுக் கடனில் எஞ்சிய தொகை - $200,000
⏱️ கழகத்திடம் திருப்பிக் கட்டுவதற்கு மீதமிருக்கும் அவகாசம் -
15 ஆண்டுகள்
✅ HDB கடனைத் தொடர்ந்தால்...
📈 நிலையான வட்டி விகிதம் - 2.6%
💲மாதாந்திரக் கட்டணம் - $1,343
✅ வங்கிக் கடனுக்கு மாறினால்... (ஒவ்வொரு வங்கியின் வட்டி விகிதமும் மாறுபடும்)
📈 நிலையான வட்டி விகிதம் - 1.9%
💲மாதாந்திரக் கட்டணம் - $1,277.82
🏢வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் - கவனிக்கவேண்டியவை என்ன?
வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனில் இரு வகை உண்டு.
ஒன்று நிலையான வட்டி விகிதமுடைய கடன்.
மற்றொன்று மாறும் வட்டி விகிதமுடையது (floating rate). அதிலும் இரு வகை உள்ளன.
ஒரு வகையில் ஒவ்வொரு மாதமும் வட்டி விகிதம் மாறும். மற்றுமொரு வகையில் 3 மாதத்திற்கு ஒருமுறை வட்டி விகிதம் மாறும்.
ஒவ்வொரு வங்கியிலும் lock-in period அவை வழங்கும் கடன் உதவி திட்டங்களுக்கு (loan package) ஏற்ப மாறுபடும்.
எனவே வங்கிக் கடனுக்கு மாற விரும்புவோர் வங்கிகளை நேரடியாக நாடியோ அல்லது அவற்றின் இணையத்தளம் மூலமாகவோ உரிய விவரங்களைக் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது என்கிறார் சொத்து முகவர் கல்பனா ராமலிங்கம்.
ஒருமுறை கழகத்திடமிருந்து வெளியேறியபின் மீண்டும் கழகத்திடம் வர முடியுமா?
அது முடியாது.
ஒருமுறை HDB கடன் வேண்டாம் என்று வெளியேறி வங்கியில் சேர்ந்துவிட்டால் திரும்பவும் கழகத்திடம் வர முடியாது.
கடன் மாற்றம் செய்ய விரும்புவோர் அது குறித்த மேல் விவரங்கள் பெற வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை நாடலாம்.
ஆனால் வங்கியிடம் மாறுவதற்கு முன்பு ஒன்றைச் சிந்திக்க வேண்டும். வங்கியின் வட்டி இன்று குறைவாக இருக்கலாம். நாளை அது உயர்ந்துவிட்டால் சிக்கல்தான்.