சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வேண்டாத துணிகளை என்ன செய்யலாம்? எங்கு வீசலாம்? தெரிந்துகொள்ளுங்கள்!

படம்: unsplash
புத்தம்புது ஆடைகளை எங்கு வாங்கலாம் எனக் கேட்டால் பலருக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால் தேவைப்படாத, வேண்டாத ஆடைகளை என்ன
செய்வீர்கள் எனக் கேட்டால்? எத்தனை பேருக்குத் தெரியும்?
'செய்தி' அதன் இணையப்பக்கத்தில் அண்மையில் ஒரு
கருத்தாய்வை நடத்தியது.
அதில் சுமார் 80 விழுக்காட்டினர் வேண்டாத ஆடைகளை அடுத்து என்ன செய்வதென்று தெரியாது என்று கூறியிருந்தனர்.
2021ஆம் ஆண்டில் 189,000 டன் (tonnes) துணிமணிகள் தூக்கி வீசப்பட்டதாகவும் அவற்றில் 96 விழுக்காட்டுத் துணிமணிகள் எரிக்கப்பட்டதாகவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
வேண்டாத ஆடைகளை என்ன செய்யலாம்? எங்கு கொடுக்கலாம்? நாம் கொடுக்கும் ஆடைகள் எங்கு செல்கின்றன? ஆராய்ந்தது 'செய்தி'.
வேண்டாத ஆடைகளை எங்கே கொடுக்கலாம்? அவை என்ன செய்யப்படுகின்றன?

- Salvation Army எனும் ரட்சண்ய சேனை
நல்ல நிலையில் உள்ள ஆடைகளை நன்கொடையாக ஏற்றுக்கொள்கிறது Salvation Army.
துணிமணிகளை நன்கொடையாக வழங்குவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறியது.
இருப்பினும் வேண்டாத துணிகளைக் கொடுக்க மேலும் பலர் முன்வரவேண்டும் என அது கேட்டுக்கொண்டது.
நல்ல நிலையில் இருக்கும் துணிகள் அதன் கடைகளில்
விற்கப்படும். அதன் மூலம் ஈட்டப்படும் தொகை, அறநிதிக்கு வழங்கப்படும்.
எப்படிக் கொடுக்கலாம்? Salvation Army எங்கெல்லாம் உள்ளது ? விவரங்கள்: https://www.salvationarmy.org/singapore/dik_fts

மற்ற அமைப்புகள்....
- Cloop எனும் அமைப்பு, மறுபயனீடு செய்யக்கூடிய துணிகளைச் சில குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள அதன் மஞ்சள் நிறத் தொட்டிகளில் சேகரிக்கிறது. அவற்றை வளரும் நாடுகளின் சமூகச் சேவை அமைப்புகளுக்கு அனுப்புகிறது.
COVID-19 நோய்ப்பரவலுக்குப் பிந்திய காலத்தில் வேண்டாத ஆடைகளை நன்கொடையாக வழங்கும் போக்கு சற்று அதிகரித்துள்ளதாக அமைப்பின் துணை நிறுவனரான டான் யின் லிங் (Tan Yin Ling) 'செய்தி'யிடம் சொன்னார்.
"நன்கொடையாக வழங்கும் ஆடைகளில் ஓட்டைகள், கறைகள் இல்லையா, அவை நல்ல நிலையில் உள்ளனவா என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்,"
என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நல்ல நிலையில் இருக்கும் ஆடைகள் விற்கப்படும் என்றும் மற்ற ஆடைகள் மறுபயனீடு செய்யப்படும் என்றும் திருவாட்டி டான் பகிர்ந்துகொண்டார்.
Cloop தொட்டிகள் சிங்கப்பூரில் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
மேல் விவரங்கள்: https://cloop.sg/

- Home அமைப்பு நன்கொடையாகப் பெறும் துணிமணிகளை அது ஆதரவு வழங்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதாகக் கூறியது.
"வேண்டாத ஆடைகளை ஒரு சமூக அமைப்பிடம் நன்கொடையாகக் கொடுப்பதற்கு முன்னர் அந்த அமைப்புக்கு அதற்கான தேவை உள்ளதா இல்லையா என்பதை ஆராயவேண்டும். சந்தேகம் இருந்தால் கேட்டு அறிந்துகொள்வது நல்லது,"
என அதன் பேச்சாளர் வலியுறுத்தினார்.
வேண்டாத ஆடைகளைச் சிலர் தூக்கி வீசுகின்றனர் என்றும் அதனைத் தவிர்ப்பதற்குப் பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு அவசியம் என்றும் Home அமைப்பு சொன்னது.
மேல் விவரங்கள்: https://www.home.org.sg/
வேண்டாத ஆடைகளை என்ன செய்யக்கூடாது?
📌வேண்டாத துணிகளை நகரமன்றங்கள் சேகரிப்பதில்லை.
📌வீட்டுக்குக் கீழே இருக்கும் நீல நிறத் தொட்டிகளில் அவற்றைப் போடக்கூடாது.
📌நல்ல நிலையில் உள்ள துணிமணிகளைக் குப்பைத் தொட்டியில் போடக்கூடாது.
📌அவற்றை புளோக்குகளுக்குக் கீழேயோ, மின் தூக்கியிலோ விட்டுச் செல்லவேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.