சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"குளிர் தாங்க முடியவில்லை" என்று கூறும் சிங்கப்பூர்வாசிகள் - காரணம்?

(படம்: unsplash)
குளிர் அதிகரித்துள்ளது. 'செய்தி'-யிடம் பேசிய சிலர் குளிர் தாங்கமுடியவில்லை என்று கூறினர்.
வீட்டுக்குள் இதமாக வைத்துக்கொள்ள கனத்த துணிகளை அணிவதாகவும் கூறினர்.
சிலர் காற்றாடியை ஓடவிட்டு இரு நாள்கள் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஏன் இந்த நிலை? தகவல்களைத் திரட்டியது 'செய்தி'.
சிங்கப்பூரில் ஆண்டுக்குச் சராசரியாக 167 நாள்கள் மழை பெய்யும். அது பெரும்பாலும் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழையாக இருக்கும்.
சிங்கப்பூரில் வழக்கமாக 2 பருவமழைக் காலங்கள் உள்ளன.
⛈️டிசம்பர்- மார்ச் இடையில் வடகிழக்கு பருவமழை.
⛈️ஜூன்- செப்டம்பர் இடையில் தென்மேற்குப் பருவமழை.
இந்த மாதம், சராசரி மழைப்பொழிவு சற்று அதிகமென சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கூறுகிறது.
சிங்கப்பூரில் தட்பநிலை இதுவரை 19.4 டிகிரி செல்ஸியஸ் வரை இறங்கியுள்ளது. ஆனால் அது 1934ஆம் ஆண்டு ஜனவரி 30, 31ஆம் தேதிகளில் பதிவானது.
இன்றைய தட்பநிலை 22 டிகிரி செல்சியஸுக்கும் 26 டிகிரி செஸ்சியஸுக்கும் இடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டுக்குள் இருந்தாலும் குளிர் தாங்கமுடியவில்லை எனச் சிலர் கூறுகின்றனர்.
தொடர்மழையால் ஏற்பட்டுள்ள ஈரப்பதம் குளிருக்குக் காரணம் என்கிறார் சுற்றுப்புற ஆர்வலர் முனைவர் N. வெங்கட்ராமன்.
"இந்த மழைப் பொழிவு வழக்கமானதுதான். சின்னச் சின்ன மழை தொடர்ச்சியாகப் பெய்கிறது. இதனால் குளிர் அதிகரித்துள்ளது. வீட்டுக்குள்ளும் அதிகக் குளிரை உணர இதுதான் காரணம்.
மற்ற நாள்களில் ஒருநாள் மழை பெய்யும். மறுநாள் வெயில் இருக்கும். இதனால் ஈரப்பதம் நீடிக்காது. ஆனால் தற்போது தொடர் மழையால் ஈரப்பதம் நீடிக்கிறது. குளிரையும் அதிகமாக உணர முடிகிறது,"
என்றார் அவர்.
ஜனவரி மாதத்தின் முதல் 15 நாள்களுடன் கடைசி 15 நாள்கள் மழை அதிகமாகப் பெய்யும் என தேசியச் சுற்றுப்புற அமைப்பு கணித்துள்ளது.
ஆயினும் மாதத்தின் கடைசி வாரத்தில் மழைப் பொழிவு குறைந்து, பிற்பகலில் மட்டும் சற்றே இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.