சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வருங்கால உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் இடம்பெறுமா? - காற்பந்து ஆர்வலர்களின் கருத்து?

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பல்வேறு நாடுகளின் அணிகள் போட்டியிட்டுக் கிண்ணத்தைத் தட்டிச் செல்ல முயல்வதைக் காண்கிறோம்.
எதிர்வரும் ஆண்டுகளில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் இடம்பெறுமா, இல்லையா?
சில காற்பந்து விளையாட்டு ஆர்வலர்களிடம் பேசிக் கருத்துத் திரட்டியது 'செய்தி'...

"சிங்கப்பூருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துக்கும் இடையில் உள்ள தூரம் பெரியது"
என்கிறார் Fourever Football நிறுவனத்தைச் சேர்ந்த காற்பந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஃபைசால் அகமது.

"காற்பந்துபோன்ற விளையாட்டுகளைவிட படிப்பு, வேலை என்பதில் இன்னமும் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது"
என்பதை அவர் சுட்டினார்.
இருப்பினும் வசதிகள், திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் காற்பந்துத் திறமைகளை வளர்ப்பதற்கான சரியான சூழல் சிங்கப்பூரில் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

"குடும்பங்கள் காற்பந்து விளையாட ஆர்வம் காட்டும் பிள்ளைகளுக்கு முழு ஆதரவளிக்கவேண்டும்"
என்கிறார் விமானியாகப் பணிபுரியும் காற்பந்து ஆர்வலரான கார்த்திகேசன் முருகன்.
அத்தகைய ஆதரவைப் பெறும்போது இளம் திறனாளர்கள் காற்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான தூண்டுதல் கிடைக்கும் என்று கருதுகிறார் கார்த்திகேசன்.

"காற்பந்து தொடர்பான முயற்சிகள் திட்டமிட்டபடிச் செயல்பட்டால் சிங்கப்பூர் நிச்சயமாக அடுத்துவரும் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியில் சேர்ந்துகொள்ளத் தகுதி பெறும்"
என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்தகைய முயற்சிகளின் மூலம் உள்ளூர் அளவில் காற்பந்துத் திறனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; அவர்களிடையில் இருக்கும் திறமைகள் வளரும் என்று அவர் சொன்னார்.

"பல காற்பந்துப் பயிற்சி நிலையங்கள் இளையத் தலைமுறையினரை வா வாவென்று அழைக்கின்றன"
என்கிறார் சிறுவர்க் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் தர்மேஷ்வரன்.
அதன் காரணமாக உள்ளூர் அளவில் கூடுதலானோரிடையே காற்பந்தாட்டத் திறமைகளை வளர்க்கும் வாய்ப்புள்ளது என்று அவர் கருதுகிறார்.

"Unleash the Roar எனும் தேசியத் திட்டம் சிங்கப்பூரை அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளில் சிறந்து விளங்கத் தயார் செய்ய உதவுகிறது"
என்பதைச் சுட்டிய அவர், திட்டத்தின் செயல்பாடுகளையும் அமைப்புமுறையையும் காணும்போது அடுத்துவரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் அணி உலகக் கிண்ணப் போட்டியில் சேரும் வாய்ப்புள்ளது என்று அவர் கருதுகிறார்.

"நாடளவில் விளையாடப்படும் காற்பந்து அனைத்துலக அளவுக்கு இல்லை"
என்கிறார் ஜானத்தன். அவர் சிங்கப்பூரிலுள்ள காற்பந்து அணி ஒன்றின் விளையாட்டாளர்.
மேலும், அனைத்துலக அளவிலான காற்பந்துப் போட்டிகளுக்கு ஈடுகொடுத்து விளையாடும்போது உலகக் கிண்ணம் போன்ற போட்டிகளுக்குத் தகுதி பெறும் வாய்ப்புக் கிட்டும் என்றார் அவர்.
நாடளவில் காற்பந்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
