MBS அறையில் தாயும் பிள்ளையும் அடைக்கப்பட்ட சம்பவம் - விமானம் ஏறிவிட்ட மூவர் கைது
SPF
மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் அறையில் கொள்ளையர்கள் ஒரு பெண்ணையும் அவருடைய பிள்ளையையும் அடைத்துவைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களிடம் கொள்ளை அடித்ததாக நம்பப்படும் ஆடவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
சீனாவைச் சேர்ந்த அவர்கள் ஷங்ஹாய்க்குச் செல்லும் விமானத்தில் புறப்படவிருந்தனர்.
விமானத்தைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களைக் கைதுசெய்தனர்.
அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 45 வயதுப் பெண் பணம் மாற்றுவதற்காக பேஃப்ரண்ட் அவென்யூவுக்குச் (Bayfront Avenue) சென்றதாகத் தெரியவந்துள்ளது.
பணம் மாற்றும் சேவை வழங்குவதாகக் கூறிய சந்தேக நபரைப் பெண் கலந்துரையாடல் செயலியில் சந்தித்தார்.
அவரிடம் 50,000 வெள்ளி ரொக்கத்தை வெளிநாட்டுப் பயணத்துக்கு மாற்றமுடியுமா என்று பெண் கேட்டார்.
அதற்கு இணங்கிய சந்தேக நபர் பெண்ணைப் பேஃப்ரண்ட் அவென்யூவுக்கு வந்து பணத்தைக் கொடுக்கும்படிச் சொன்னார்.
பின்னர் பெண்ணையும் அவருடைய பிள்ளையையும் சந்தித்த ஆடவர் ஒருவர், அவர்களை மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
ஆடவரும் அறையில் இருந்த இன்னொருவரும் பெண்ணை மிரட்டிப் பணத்தைப் பறித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பெண்ணும் பிள்ளையும் காயமடைந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
இருவரும் பின்னர் அறையில் அடைத்துவைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த 4 மணி நேரத்துக்குள் காவல்துறையினர் சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 20 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.