பலமுறை எச்சரித்தும் புறாக்களுக்குத் தீனி போட்ட பெண்ணுக்கு $6,500 அபராதம்
படம்: CNA/Wallace Woon
புறாக்களுக்குத் தீனி போட்ட 64 வயதுப் பெண்ணுக்கு 6,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பலமுறை எச்சரித்தும் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.
சோ சூன் ஹியோங் (Soh Choon Heong) எனும் அவர் புறாக்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தபோது
தேசிய பூங்காக் கழக (NParks)) அதிகாரிகளிடம் சிக்கினார்.
விசாரிக்க முயன்றபோது அவர் உடனே பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றார்.
அதிகாரிகளுக்குத் தவறான சுயவிவரத் தகவல்களை அவர் தர முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
புறாக்களைக் காப்பாற்றுவதற்காக அவற்றுக்குத் திடீர் நூடுல்ஸ், ரொட்டித் துண்டுகளைப் போட்டதாக அவர் நீதிமன்றத்தில் சொன்னார்.
வனவிலங்குகளுக்கு அனுமதியின்றி உணவளித்த மூன்று குற்றச்சாட்டுகளையும் அதிகாரிக்குத் தடங்கல் ஏற்படுத்திய குற்றச்சாட்டையும் சோ ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் பறவைகளுக்குச் சட்டவிரோதமாக உணவளித்த பாதி சம்பவங்களுக்கு 65 வயது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் காரணம் என்று CNA செய்தி தெரிவித்தது.
இது 2023க்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் பதிவான எண்ணிக்கை.
முதியவர்கள் தனிமை உணர்வைப் போக்க அவ்வாறு நடந்துகொள்வதாக நம்பப்படுகிறது.
வனவிலங்குகளுக்கு அனுமதியின்றி வேண்டுமென்றே தீனி போட்டதாக முதல்முறையாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்வோருக்குக் கூடியபட்சம் 12 மாதங்கள் சிறையும் 20,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.