Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'வருணிக்க முடியாத தன்னம்பிக்கை பிறக்கிறது' - தனியாகச் சுற்றுப்பயணம் செல்லும் பெண்கள்

வாசிப்புநேரம் -
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் தனியாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

குடும்பத்துடனோ, குழுவாகவோ பயணம் செய்து பழகிப் போன இந்தியர்கள் பலருக்கு இது புதுமையாக இருக்கிறது.

தனித்துச் சென்று எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கின்றனர் பெரியவர்கள்.

சமுதாயம் இதை வித்தியாசமாகப் பார்த்தாலும் பல பெண்கள் இதனை விரும்புகின்றனர். அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர்.

அவர்களில் சிலருடன் பேசியது 'செய்தி'
ஷர்மிளா, துருக்கியே
தவறாக எடைபோடும் சமூகம்

பெண்கள் தனியாகச் சுற்றுப் பயணம் செல்லும்போது அது பாதுகாப்பு அல்ல என்னும் பொதுவான கண்ணோட்டம் இருக்கிறது.

அப்படிப்பட்ட பெண்களைச் சமுதாயம் தவறாகவும் எடைபோடுவதாக வருத்தத்துடன் சொன்னார் ஷர்மிளா.

அப்படிச் செல்லும் பெண்கள் கட்டுப்படாதவர்கள் என்னும் ஒரு தவறான கண்ணோட்டம் நிலவுவதாக ஒப்பனைக் கலைஞராக இருக்கும் நிவேதா பகிர்ந்துகொண்டார்.

பலர் இப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தாலும், சொந்த வரையறைகளை ஒருபோதும் திணித்துக்கொண்டுவிடக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.
நிவேதா, கோலாலம்பூர்
'தனிப்பட்ட சுதந்திரம்'

இதில் கிடைக்கும் தனிப்பட்ட சுகத்துக்கும் சுதந்திரத்திற்கும் ஈடில்லை என்று சொன்னார் ஷர்மிளா.

"இன்னும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது," என்கிறார் இவர்.

தாதியாகப் பணிபுரியும் பிரித்தா அவ்வப்போது இத்தகைய தனிப் பயணங்களை மேற்கொள்கிறார்.

அப்படிச் செல்லும்போது பற்பல வாய்ப்புகளும், புதிய கண்ணோட்டமும் கிடைக்கின்றன என்கிறார் அவர்.
பிரித்தா, ஆஸ்திரேலியா
"தன்னம்பிக்கை பிறக்கிறது"

பிறரைச் சாராமல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது, தமக்கு வருணிக்க முடியாத தன்னம்பிக்கையைக் கொடுப்பதாகச் சொன்னார் கணவரை விட்டுவிட்டு அவ்வப்போது தனியாகப் பயணம் செல்லும் நிவேதா.

சவால்களைச் சந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும், புத்தம் புது அனுபவங்களைப் பெற முடியும், மனத்தை ஒருநிலைப்படுத்த முடியும் என்று இதனால் இருக்கும் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் PhD படிப்பை மேற்கொள்ளும் சுவாதித்தியா.

"ஆரம்பக்கட்டத்தில் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக அது சரியானது. வெளிநாட்டில் புது நண்பர்களைச் சந்திக்கும்போது, தனிமையும் விலகிவிடுகிறது,"

என்றார் மேடை நாடகங்களை இயக்கும் யக்ஞா.

தம்மைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள பயணங்கள் சிறந்த வாய்ப்பாக அமைவதாக அவர் கூறினார்.
சுவாதித்தியா, ஃபித்ஸ்ரோய் தீவு (Fitzroy Island)
காலம் மாறுகிறது. காலத்துக்குத் தகுந்தவாறு நாமும் மாறிக் கொள்கிறோம்.

குழுவாகச் செல்வதில் ஒரு சுகம் என்றால், தனியாகச் செல்வதில் ஒரு சுகம் என்கின்றனர் இவர்கள்.

எல்லாம் ஓர் அனுபவம்..... தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்த அனுபவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை என்பது இவர்கள் கருத்து.
யக்ஞா, ஜப்பான்
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்