'உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் துணை மின்-உற்பத்திக் கருவி செயலிழந்ததால் மின்சாரத் தடை'

Telegram
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில், துணை மின்-உற்பத்திக் கருவி செயலிழந்ததால் மின்சாரத் தடை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்று (9 அக்டோபர்) அதிகாலை ஏற்பட்ட மின்சாரத் தடை கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்தது.
சோதனைச்சாவடியின் மின்சார வளத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் துணை மின்-உற்பத்திக் கருவி பயன்பாட்டில் இருந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் சொன்னது.
பின்னிரவு 12.20 மணியளவில் கருவி செயலிழந்ததால் மின்சாரத் தடை ஏற்பட்டது.
தடையால் சோதனைச்சாவடியில் நீண்ட வரிசைகள் இருந்ததாகவும் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்கத் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
சோதனைச்சாவடியில் மின்சார விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் சொன்னது.
அவ்வேளையில், சிங்கப்பூருக்குள் நுழையக் காத்திருந்த வாகனங்கள் பழைய உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வளாகத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்பில் மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியதாக ஆணையம் சொன்னது.
அதிகாலை 5.30 மணியளவில் மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது.