வேலையிடப் பாகுபாட்டைக் கையாள உதவும் புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
வேலையிடப் பாகுபாடு குறித்து ஊழியர்கள் புகார் செய்யும் புதிய நடைமுறையை எடுத்துரைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களே பேசித் தீர்க்கப் புதிய நடைமுறை ஊக்குவிக்கிறது.
நியாயமான முறையில் சர்ச்சைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு நடைமுறை உதவும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கூறினார்.
புதிய நடைமுறையின்கீழ் வேலையிடப் பாகுபாட்டைச் சந்திக்கும் ஊழியர்கள் முதலில் முதலாளியிடம் புகார் அளிக்கவேண்டும்.
நிறுவனத்தின் நிர்வாகம் அதனைக் கையாளும்.
அதன்வழி தீர்வு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சமரசப் பேச்சுக்குச் செல்லவேண்டும்.
சமரசப் பேச்சிலும் தீர்வு கிடைக்கவில்லை என்ற நிலையில் சட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
அத்தகைய வழக்குகளின் தீர்ப்புகளை வெளிப்படையாகப் பொதுமக்கள் காணும்படி வகைசெய்ய அதிகாரிகள் முனைகின்றனர்.
புதிய சட்டத்தில் கூடுதலான வெளிப்படைத்தன்மையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருக்கின்றனர்.
எனினும் வழக்குகள் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் நடத்தப்படும்;
அப்போதுதான் அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்பாக அவர்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளமுடியும் என்று அமைச்சர் டான் சொன்னார்.
2027ஆம் ஆண்டின் இறுதியில் புதிய சட்டம் நடப்புக்கு வரும்.