சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'இளையர்களின் குரல் கேட்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது'- தேசிய தினக் கூட்ட உரையில் கலந்துகொண்ட இளையர்கள்

(AFP)
தேசிய தினக் கூட்ட உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த இளையர்கள், தங்கள் குரல் கேட்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினர்.
திரு லீ சியென் லூங் அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில்
தேசிய தின உரையாற்றினார்.
உலக அரசியலில் நிச்சயமற்ற தன்மை, உலகத்தரம் வாய்ந்த திறனாளர்களை ஈர்ப்பதற்கான அனைத்துலகப் போட்டி, உலகத்துடன் தொடர்புகளை வலுப்படுத்தும் அவசரத் தேவை ஆகியவை குறித்துப் பிரதமர் லீ பேசினார்.
சிங்கப்பூர் தொடர்ந்து ஒரு நாடாக முன்னேற, வருபவர்களையும் ஏற்றுக்கொண்டு இங்கிருப்போரும் ஒற்றுமையோடு செயல்படவேண்டும் என்றார் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் மகளிர் அணி உறுப்பினரான அஸ்மது பீவி.
போட்டி நமக்குள் இல்லை உலகளவில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் அவர்.
"நீ, நான் என்ற போட்டி தொடர்ந்தால், ஒரு நாடாக ஒரு சமூகமாக நாம் பாதிக்கப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். "
வெளிநாட்டுத் திறனாளர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக ஒன்றுசேர்ந்து பணியாற்றுவது சிறந்தது என்று கருதுவதாகச் சொன்னார் அவர்.

COVID-19 காலக்கட்டத்தில் சிங்கப்பூரர்கள் பலர் எதிர்பார்ப்பின்றி உதவியதைத் திரு. லீ விவரித்தபோது பரவசமாக உணர்ந்ததாய்ச் சொன்னார் தேசிய தினக் கூட்ட உரையில் கலந்துகொண்ட பவீனா.
ஒன்றிணைந்து நாம் இந்த நோய்ப்பரவலைக் கடந்துவிட்டோம் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
ஆண்களுக்கு இடையிலான பாலுறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377A சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று திரு லீ அறிவித்தார்.
அரசாங்கம் இளையர்களின் கருத்துகளைக் கேட்கிறது, கருத்தில் கொள்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
என்றார் பவினா.

நிதி உதவி தேவைப்படுவோருக்கு, பல பிள்ளைகள் உள்ள குடும்பத்துக்கு அளிக்கப்படும் உதவிகள் பற்றித் திரு லீ தெரிவித்தார். இத்தகைய உதவிகள் பணவீக்கத்தைக் கடந்துவர உதவும் என்றார் அடித்தளத் தலைவரான திருபிரகாஷ் சுப்பையா .
ஒற்றுமையாக இருப்பதைப் பற்றியும் திரு லீ பேசினார். வேறுபாடு இல்லாமல் ஒன்றுசேர்ந்து எதிர்கால சிங்கப்பூரை அமைத்துக்கொடுக்கலாம் என்பது அவர் கூறிய கருத்துகளில் தம்மைக் கவர்ந்தது என்றார் திரு. பிரகாஷ்.
சிங்கப்பூரராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதும் நாமே நமது பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் தேசிய தின உரையில் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
