Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"வீட்டில் சிகை அலங்காரச் சேவைகளை வழங்கினாலும் தரத்தில் எந்தக் குறையுமில்லை"

வாசிப்புநேரம் -

தொழில் தொடங்குவதற்குப் பலர் முதல் படியை எடுத்து வைக்கவே தயங்கும்போது வீட்டில் இருந்தபடியே மனத்திற்குப் பிடித்த தொழிலைச் செய்யலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சிகை அலங்காரச் சேவைகளை வழங்கும் பெர்னர்ட்.

கடந்த 14 ஆண்டுகளாகச் சிகை அலங்காரத் துறையில் வேலை செய்யும் அவர் அண்மையில் சொந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு ஏற்றவாறு தமது வீட்டையும் வடிவமைத்திருக்கிறார்.

படம்: மெலிசா மேனுயல்

'செய்தி'யுடன் மனம்விட்டுப் பேசினார் 33 வயது பெர்னர்ட்.

"தரமான சேவை, கட்டுப்படியான விலை"

சிறுவயதிலிருந்தே சொந்தக் காலில் நிற்கவேண்டும் எனும் வெறி தமக்கு இருந்ததாக பெர்னர்ட் கூறினார்.

தமக்குப் பிடித்த தொழிலில் முன்னேறவேண்டும் எனும் கனவு தம்மை வீட்டில் இருந்தபடியே தொழிலை ஆரம்பிக்கத் தூண்டியதாக அவர் தெரிவித்தார்.

அதுபோக வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையைக் கட்டுப்படியான விலையில் வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர்.

வீட்டில் தொழில் நடத்தும்போது வாடகைச் செலவுகளைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

அதனால் கட்டணங்களை மலிவான விலையில் வைத்திருக்க முடிகிறது என்றார் பெர்னர்ட்.

"தனிப்பட்ட கவனம், நேரக் கட்டுப்பாடு இல்லை"

கடையில் சிகை அலங்காரச் சேவை வழங்கினால் பல வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டியிருக்கும். இங்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட கவனம் கிடைக்கிறது. நேரக் கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் விருப்பத்திற்கேற்ப எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் முடிதிருத்திக்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்ளலாம்.

"கடையில் இருப்பது போன்ற உணர்வு"

வாடிக்கையாளர்கள் தங்களுக்குக் கடையில் இருப்பது போன்ற உணர்வு கிடைப்பதாகவும் சேவைத் தரத்தில் எந்தக் குறையுமில்லை என்றும் தம்மிடம் பகிர்ந்ததாக பெர்னர்ட் பெருமிதம் கொண்டார்.

இளையர்களிடம் சொல்ல விரும்புவது?

"தொழில் செய்ய ஆர்வம் இருந்தால் காத்திருப்பதற்குப் பதிலாக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்; தொழிலை வீட்டிலேயே ஆரம்பிக்கலாமே"
படம்: பெர்னர்ட்
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்