வழிவழியாய்...
இன்று நான்... நானாக இருக்கக் காரணம் என் பெற்றோர். திரும்ப வராதா என்று நான் ஏங்கும் என் பிள்ளைப் பருவம்.

இன்று நான்... நானாக இருக்கக் காரணம் என் பெற்றோர்.
திரும்ப வராதா என்று நான் ஏங்கும் என் பிள்ளைப் பருவம்.
தத்தித்தத்தி நான் நடந்ததைக் கண்சிமிட்டாமல் ரசித்த என் பெற்றோர்.
எனக்கு விழுந்து விழுந்து ஊட்டியதாகட்டும். என்னுடன் சேர்ந்து விளையாடியதாகட்டும். எனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது... இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடை.
பண்டிகை நாட்களில் பட்டாடை அணிவித்துப் பரவசப்பட்ட பாங்கு.
விதவிதமான பலகாரங்களைச் செய்து திக்குமுக்காட வைத்த தருணங்கள்.
பக்கத்திலேயே உட்கார்ந்து படிப்புச் சொல்லிக்கொடுத்த பண்பு.
இரவில் கழுத்தைக் கட்டிக்கொண்டு நான் தூங்கும்போது நகர்ந்தால் பிள்ளை விழித்துவிடுமோ என்ற அவர்களின் பயம்.
நல்லது, தீயது அறியாத வயதில், அரவணைத்துச் சொல்லிச் சொல்லி வளர்த்த காலம்.
நல்லதைச் செய்துவிட்டால் போதும்.. என் பிள்ளை, என் பிள்ளை என்று வாய் ஓயாமல் சொல்லிப் பெருமைப்பட்ட விதம்.
தெரியாமல் செய்த சிறுசிறு தவறுகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகத் திருத்திய என் அன்புப் பெற்றோர்.
என் செயல் வருத்தத்தைத் தந்தாலும் இறுதியில் விட்டுக்கொடுப்பதோ அவர்கள்தான்.
அதுதான் அவர்கள் என்னை நல்வழிப்படுத்துவதற்கு எடுத்த ஆயுதம்.
தன்னலமற்ற அந்த அன்புள்ளங்களை என் பெற்றோர் என்று சொல்லிக் கொள்வதைவிட வேறென்ன பெருமை வேண்டும் எனக்கு?
சிறுசிறு செல்லச் சண்டைகள்... கொஞ்ச நேரத்திலேயே அவற்றை உதறித் தள்ளிவிட்டு ஒன்றாய் அளவளாவிய அழகான காலம்.
குடும்பம் என்றால் இதுதானோ என்று என்னைச் சிந்திக்க வைத்த பொற்காலம்.
என் பெற்றோருடன் நான் இருந்த காலம் எப்படி என் நினைவை விட்டு நீங்கும்? அதிவேகமான இன்றைய சூழலில் என் பிள்ளை என்னைப் பற்றி இதே வார்த்தைகளைச் சொல்வது சாத்தியமா?
எனக்குப் பிறகும் என் பிள்ளை என்னைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும்.
என்ன செய்யலாம்? யோசித்தேன்.
முடிவெடுத்தேன். நான் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை.
என் பெற்றோரின் பாதையைப் பின்பற்றத் தொடங்கினேன்.
என் பிள்ளை பிறந்ததுமுதல் ஒவ்வொன்றிலும் கவனமாக இருந்தேன்... இருக்கிறேன்.
கண்முன் பலன் தெரியும்போது ஊக்கம் தர வேறென்ன வேண்டும்?
நல்விதையை ஆழமாக விதைத்துவிட்டேன். காலம் அறுவடை செய்யும் எனக் காத்திருக்கிறேன்.
அன்புடன்
சித்ரா பாலகுமரன்
