கூஸ்மான் சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது
மெக்சிக்கோ அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் பெரும்புள்ளி கூஸ்மான் சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற காட்சியை வெளியிட்டுள்ளது.

கூஸ்மான் தப்பிச்சென்ற சுரங்கம்
மெக்சிக்கோ சிட்டி, மெக்சிக்கோ: மெக்சிக்கோ அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் பெரும்புள்ளி கூஸ்மான் (Guzman) சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற காட்சியை வெளியிட்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்த கண்காணிப்புக் கேமராவில் அந்தப் படம் பதிவாகியிருந்தது. மிகக் குறுகலான அறையில் அடைக்கப்பட்டிருந்த கூஸ்மான் ஒன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடிச் சுரங்கத்தின் மூலம் தப்பித்ததாகக் கூறப்பட்டது.
இடுப்பளவு மறைக்கப்பட்ட குளியல் அறைக்குள் கூஸ்மான் செல்வதைப் படம் காட்டுகிறது. இரவு மணி 8:52க்கு உள்ளே நுழைந்த கூஸ்மான் பிறகு அங்கிருந்து வெளியேறவில்லை. குளியல் அறைக்குக் கீழே 10 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தொடங்குகிறது. அதற்குள் இறங்கிச் செல்ல ஏணி இருந்தது. சற்றுக் குள்ளமான உருவம் கொண்ட கூஸ்மான் சிரமமின்றி நடந்து செல்ல ஏதுவாக 1.7 மீட்டர் உயரமும் 70 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட சுரங்கம் தோண்டப்பட்டிருந்தது.
இருண்ட சுரங்கத்திற்கு ஒளியூட்ட மின்விளக்கும் சுவாசிக்கத் தேவையான பிராணவாயுக் கலனும் உள்ளே இருந்தன. சுரங்கம் தோண்டும்போது உருவாகும் மண்ணை அள்ளிச் செல்ல ஒரு மோட்டார் வண்டி பயன்படுத்தப்பட்டது. அது எளிதாகச் செல்லத் தண்டவாளமும் பதிக்கப்பட்டிருந்தது. சிறைச்சாலையில் தொடங்கிய சுரங்கம் ஒரு கட்டுமானத் தளத்தில் சென்று முடிகிறது. அவ்வளவு பெரிய சுரங்கத்தைத் தோண்ட ஓராண்டு பிடித்திருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
கையூட்டுப் பெற்ற சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி அது நடந்திருக்க இயலாது என்று மெக்சிக்கோ செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.