சிலியில் கடுமையான நிலநடுக்கம்
சிலியை 8.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள், 1,400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் Buenos Aires வரை உணரப்பட்டது.
சிலியை இன்று 8.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது
சன்டியாகோ, சிலி: சிலியை 8.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள், 1,400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் Buenos Aires வரை உணரப்பட்டது. அதனையடுத்து, சிலி, பெரு ஆகியவற்றின் பசிஃப்பிக் கரையோரம் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிலியின் கரையோரத்தில் அலைகள் 3 மீட்டர் உயரத்துக்கு மேல் செல்லக்கூடும் என்று ஹவாய்யைத் தளமாகக் கொண்டு செயல்படும் பசிஃப்பிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் எச்சரித்துள்ளது. ஜப்பான், நியூசிலந்து, பிஜி ஆகிய இடங்களிலும், சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிலி தலைநகர் சன்டியாகோவில் மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறினர். அங்கு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமுற்றதாகவும் கூறப்பட்டது. நிலநடுக்கம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள், சுமார் 6.1 ரிக்டர் அளவிலான 3 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் கழகம் தெரிவித்தது.
செப்பு ஏற்றுமதியில் உலகில் முதல் நிலை வகிக்கும் நாடு சிலி. அரசாங்கச் செப்புச் சுரங்க நிறுவனமான Codelco, நிலநடுக்கத்தில் தனது ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிலியை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. அதில் ஐநூற்றுக்கும் அதிகமானோர் மாண்டனர்.