மலேசியாவில் மோசமாகிறது வெள்ள நிலவரம்
நாளையிலிருந்து, வரும் புதன்கிழமை வரை இன்னும் கடுமையான தொடர்-மழையை மலேசியாவில் எதிர்பார்க்கலாம்

மலேசியாவில் மோசமான பருவ நிலை காரணமாக மேலும் பலர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். இதுவரை சுமார் 160~ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் அந்த எண்ணிக்கை சுமார் 120~ஆயிரமாக இருந்தது.
வெள்ளத்துக்கு இதுவரை எட்டு பேர் பலியானதாக அறிக்கைகள் கூறின. நாளையிலிருந்து, வரும் புதன்கிழமை வரை இன்னும் கடுமையான தொடர்-மழையை மலேசியாவில் எதிர்பார்க்கலாம் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பாஹாங், ஜோகூர், சாபா, சரவாக் ஆகிய ஒன்பது மாநிலங்களும் அந்தத் தொடர்-மழையால் பாதிக்கப்படும் ஆபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மலேசியப் பிரதமர் திரு நஜிப் ரசாக், வெள்ளநீர் வடிந்த பிறகு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குக் கைகொடுக்க 143 million டாலர் சிறப்பு நிதியொன்றை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இம்முறை வெள்ளத்தால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்துக்குச் சென்றிருந்தபோது அவர் அவ்வாறு சொன்னார்.
பேரா மாநிலத்திலும் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கிவிட்டதால், அவசர உடைமைகளையும் உணவுப் பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சிகள் படகுகளிலும் விமானங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. கிளந்தானுக்கு அடுத்து, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம், திரெங்கானு.