உ.கி.கிரிக்கெட் : பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் காலிறுதிக்குத் தகுதி
பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின்டிலெயிட் நகரில், சற்று முன்னர் நடந்துமுடிந்த ஆட்டத்தில், பாகிஸ்த்தான் ஏழு விக்கெட் வித்தியாசத்தில், அய்ர்லந்தை வெற்றிகண்டது.
பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின்டிலெயிட் நகரில், சற்று முன்னர் நடந்துமுடிந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் ஏழு விக்கெட் வித்தியாசத்தில், அய்ர்லந்தை வெற்றிகண்டது. பூவா தலையாவில் வென்ற அயர்லந்து, முதலில் பந்தடித்தது. அது, ஐம்பது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 237 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் பந்தடித்த பாகிஸ்தான், 46 புள்ளி ஒரு ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு, 241 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது. பாகிஸ்தானின் சர்ஃபராஸ் அஹமெத், ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர், நியூசிலந்தின் நேப்பியர் நகரில் நடந்த ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை வெற்றிகண்டது. முதலில் பந்தடித்த ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், 175 ஓட்டங்களில் சுருண்டது. ஆட்ட நாயகன் ஜேசன் ஹோல்டர், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஏறக்குறைய 20 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது.
வரும் 18-ஆம் தேதி, புதன்கிழமை நடைபெறவிருக்கும் முதல் காலிறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் சந்திக்கவிருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி, வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், பங்களாதேஷும், இந்தியாவும் பொருதவிருக்கின்றன.
வரும் இருபதாம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் மூன்றாவது காலிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் சந்திக்கவிருக்கின்றன.
அதன் பிறகு, வரும் 21-ஆம் தேதி, சனிக்கிழமை, நான்காம் காலிறுதிப் போட்டியில், நியூசிலந்தும், வெஸ்ட் இண்டீஸும் பொருதவிருக்கின்றன.