மலேசிய வெள்ளம் : அவசரகால நடவடிக்கைகள்
பத்து ஆண்டுகளில் கண்டிராத மோசமான வெள்ளப் பேரிடர்

படம்: @NajibRazak/Twitter
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவில் அவசரகால நடவடிக்கைகளுக்குத் திட்டமிட பிரதமர் திரு நஜிப் ரசாக் இன்று கிளந்தான் மாநிலத்திற்கு வருகையளித்துள்ளார். நாடு கடந்த பத்து ஆண்டுகளில் கண்டிராத மோசமான வெள்ளப் பேரிடரை எதிர்நோக்குவதால் அவர் அமெரிக்காவில் தமது விடுமுறையைச் சுருக்கிக் கொண்டு நாடு திரும்பினார்.
இதுவரை சுமார் 130 ஆயிரம் பேர், வெள்ளத்தால் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு ஆளாயினர். குறைந்தது ஐந்துபேர் வெள்ளத்திற்குப் பலியாயினர்.
பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் நெகிரி செம்பிலானும் சேர்ந்துகொண்டுள்ளது. இன்று காலையில் அங்கு பெருகிய வெள்ளத்தால் 300 பேர் பாதிக்கப்பட்டனர். அடைமழையால் அவதிப்படும் எட்டு மாநிலங்களில் கிளந்தான் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் சுமார் 56 ஆயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதமர் திரு நஜீபும் அவருடைய அரசாங்கமும் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று குறைகூறப்படுகிறது.
மலேசியாவின் கிழக்குக் கரையோர மாநிலங்கள், பேரா, சபா, சரவா, ஜொகூர் ஆகியவற்றில் நாளை மேலும் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைமழை ஒரு வாரத்திற்குத் தொடரும் என்றும் தற்போதைய வெள்ளப்பெருக்கு மேலும் மோசமடையும் என்றும் வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.