மாண்ட டிரான்ஸ்ஏஷியா விமானிக்குப் புகழாரம்
தைவான் விமான விபத்தில் மாண்ட டிரான்ஏஷியா(Transasia) விமானி திரு லியாவ் சியென் சுங்(Liao Chien Tsung), பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த வீரராகப் போற்றப்படுகிறார்.
தைவான் விமான விபத்தில் மாண்ட டிரான்ஏஷியா(Transasia) விமானி திரு லியாவ் சியென் சுங்(Liao Chien Tsung), பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்த வீரராகப் போற்றப்படுகிறார். ATR 72-600 விமானம் ஆற்றில் விழுந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் குறைந்தது முப்பத்தொரு பேர் மாண்டனர். புறப்பட்ட ஓரிரண்டு நிமிடத்தில் நிலை தடுமாறிய விமானம் குடியிருப்புப் பேட்டைகள், உயர்மாடிக் கட்டடங்கள் ஆகியவற்றில் மோதாமல் ஆற்றில் விழுந்தது. அதற்கு முக்கியக் காரணம் விமானி திரு Liao என்று சொல்லப்படுகிறது.
தைப்பே விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட டிரான்ஏஷியா விமானம், கீலுங் ஆற்றில் விழுந்தது. அதற்கு முன்பாக ஆற்று மேம்பாலத்தில் ஒரு டாக்சி, தடுப்புச் சுவர் ஆகியவற்றை இடித்துச் சேதப்படுத்தியது.
அதைத் தவிர வேறு அதிகப் பாதிப்பில்லை. அதற்குக் காரணம் விமானி திரு லியாவ் சியென் சுங்.
விழுந்து நொறுங்கும் அபாயத்தை எதிர்கொண்ட விமானத்தை பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காமல் செலுத்துவது அவரது எண்ணமாக இருந்தது.
திரு Liao-இன் நற்செயலை விமானத் துறையினர், பொதுமக்கள், இரு தரப்பினரும் மனதாரப் பாராட்டுகின்றனர்.
தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேளையில்கூட பொதுமக்களின் நலனைக் கருதி இயங்கிய திரு Liao, அவரது துணை விமானிகள் ஆகியோரின் துணிகரச் செயலை எண்ணி தைவானிய மக்கள் பெருமைப்படுகின்றனர்.
இதற்கிடையே தைவான் அதிபர் மா யிங் சியோ(Ma Ying-jeou) விபத்தில் மாண்டோரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரையும் அவர் நேரில் சென்று சந்தித்துவருவதாகக் கூறப்பட்டது.