Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு செய்தியில் மட்டும்

இணையம், தொலைக்காட்சி, சமூக இடங்கள், Discord தளம்... எத்தனை எத்தனை வழிகள் உலகக் கிண்ணத்தைக் காண...

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் காண சிங்கப்பூரர்கள் பலர் கத்தாருக்குச் சென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள காற்பந்து ரசிகர்கள் போட்டியை எவ்வாறு கண்டு களிக்கின்றனர்?

ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு விதம். 

Discord தளத்தில்...

(படம்: பிரவின் ரமேஷ்)


"போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் நடைபெற்றன. வாரநாள்களில் பள்ளி அல்லது வேலை முடிந்து சோர்ந்துபோய் இருக்கும் வேளையில் வெளியே செல்லாமல் போட்டியை Discord தளம் வழி வீட்டில் பார்ப்பது மிக வசதியாக இருந்தது" என்றார் 24 வயது பிரவின் ரமேஷ்.

அவ்வாறு பார்ப்பது நண்பர்களிடையே பிணைப்பையும் ஏற்படுத்துவதாகச் சொன்னார் 19 வயது S. மனோஜ்.

"Discord தளத்தில் என்னுடன் சேர்ந்து போட்டியைப் பார்க்கும் நண்பர்கள் அனைவரும் தீவிரமான காற்பந்து ரசிகர்கள். போட்டியை ஒன்றாகப் பார்த்து அதைப் பற்றி கலந்துரையாடும்போது நட்பு மேலும் வலுவடைகிறது" என்றார் அவர்.

தொலைக்காட்சியில் பார்ப்பது...

(படம்: முகமது)

தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல் வராது என்கிறார் 31 வயது அந்தோனி பரத் நிகோலஸ் (Anthony Bharath Nicholas). 

"தொலைக்காட்சியில் சந்தா வாங்கிக்கொண்டு பார்க்கும்போது இடைவெளி இல்லாமல் பார்க்கலாம். இணையத்தளங்கள், Discord தளம் ஆகியவற்றில் பார்க்கும்போது சில சமயங்களில் இணையத்தொடர்பு விடுபட்டுவிடும். 

முக்கிய கோல் தருணங்களைத் தாமதமாகப் பார்க்கும் நிலை ஏற்படலாம்," என்றார் அவர்.

தொலைக்காட்சியில் போட்டியைப் பார்க்கும்போது, கோல்களைச் சுதந்திரமாகச் சத்தமிட்டுக் கொண்டாடலாம் என்கிறார் 49 வயது முகமது.

"வெளியிடங்களில் சத்தமிட்டுக் கொண்டாடினால் வேறு அணிகளை ஆதரிப்பவர்களோடு விவாதங்கள் நேர வாய்ப்புண்டு. அதையெல்லம் தவிர்க்க வீட்டிலிருந்து பார்ப்பதையே விரும்புகிறேன்"

 

சமூக இடங்களில் பார்ப்பது...

(காணொளி: A. அருண்மோகன்)

"சந்தா வாங்கி போட்டியை வீட்டில் காணும் வசதி இருந்தாலும், அதைச் சமூக இடங்களில் பார்க்கும்போது கத்தாரின் அரங்கத்தில் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது," என்கிறார் 30 வயது தீவிர ரசிகர் A. அருண்மோகன்.

"நான் ஆதரித்த இங்கிலாந்து அணி விளையாடிய போட்டிகளைச் சிங்கப்பூரின் விளையாட்டு அரங்கத்தில் போய்க் காண்பேன். பெரிய திரையில் பெரிய கூட்டத்துடன் ஆட்டத்தைப் பார்ப்பது ஒரு தனி சுகம்," என்றார் அவர்.

வீட்டிலிருப்பவர்களுக்குத் தொந்தரவு தராமல் போட்டியைச் சமூக மன்றத்தில் காண்பதை விரும்புகிறார் 25 வயது கிரிஷான் பிரகாஷ் நம்பியார்.

" வாரநாள்களில் ஆட்டங்கள் இரவு நேரம் மிகத் தாமதமாக நடந்தன.  நண்பர்களுடன் ஆட்டத்தைப் பார்க்கும்போது சில சமயங்களில் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் குடும்பத்தினருக்குத் தொந்தரவாக இருக்கலாம். அதனால் வீட்டின் அருகே இருக்கும் சமூக மன்றத்தில் நண்பர்களுடன் போட்டியைப் பார்த்தேன்" என்றார் அவர். 

இறுதிப் போட்டியைக் காணவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டம் வைத்துள்ளனர். 

எதில் பார்த்தாலும், இவர்களுக்குள் இருக்கும் உற்சாக உணர்வு என்னவோ ஒன்றுதான்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்