உலகக் கிண்ணம் 2026: $871 மில்லியன் ஒதுக்கும் FIFA
(கோப்புப் படம்: REUTERS/Brendan McDermid)
This audio is generated by an AI tool.
இந்த ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கவுள்ளதாக FIFA தெரிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு 871 மில்லியன் டாலராக (சுமார் 1.1 பில்லியன் வெள்ளி) உயரும். முன்னதாக அது 727 மில்லியன் டாலராக (சுமார் 928 மில்லியன் வெள்ளி) இருந்தது.
போக்குவரத்துச் செலவுகள், வரிகள், ஒட்டுமொத்தச் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவற்றின் உயர்வால் ஏற்படக்கூடிய நட்டத்தைச் சமாளிக்க அந்த முடிவு எடுக்கப்பட்டது.
போட்டிக்குத் தயாராவதற்கான செலவுகளைச் சமாளிக்கத் தகுதி பெற்றுள்ள 48 நாடுகள் ஒவ்வொன்றுக்கும் 2.5 மில்லியன் டாலர் (3.1 மில்லியன் வெள்ளி) வழங்கப்படும் என்றது FIFA. முன்னதாக அந்தத் தொகை 1.5 மில்லயன் டாலராய் (1.9 மில்லியன் வெள்ளி) இருந்தது.
மேலும் தகுதிபெற்ற அனைத்துக் குழுக்களுக்கும் 10 மில்லியன் டாலர் (சுமார் 12.7 மில்லியன் வெள்ளி) சன்மானமாக வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்பு 9 மில்லியன் டாலர் (சுமார் 11.4 மில்லியன் வெள்ளி) வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
நான்கு வருடத்திற்கு ஒருமுறை உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி நடைபெறுகிறது. இந்த வருடத்தின் போட்டி மூலம் FIFA அமைப்பு சுமார் 13 பில்லியன் டாலர் (16.6 பில்லியன் வெள்ளி) வருவாயை ஈட்டும் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டின் அறிவிப்புப்படி வெற்றிபெறும் குழு 50 மில்லியன் டாலரைத் (சுமார் 64 மில்லியன் வெள்ளி) தட்டிச்செல்லும்.
இரண்டாம் நிலையில் வரும் அணிக்கு 33 மில்லியன் டாலர் (சுமார் 42 மில்லியன் வெள்ளி) பரிசுத்தொகையாக வழங்கப்படும்.