"காற்பந்துப் போட்டியின்போது மோதல்... விளையாட்டாளர் மாண்டது வேதனையளிக்கிறது"
(படம்: Handout / CD TENERIFE / AFP)
This audio is generated by an AI tool.
ஸ்பெயினில் காற்பந்துப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு விளையாட்டாளர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனையை அளித்திருப்பதாக எதிரணி கோல்காவலர் தெரிவித்திருக்கிறார்.
தமது வாழ்க்கையின் மிகக் கடினமான நாள்களைக் கடந்து செல்வதாக FC அண்டோரா (Andorra) கோல்காவலர் ஜீசஸ் ஒவோனோ (Jesus Owono) கூறினார்.
திங்கட்கிழமை (2 நவம்பர்) நடைபெற்ற இரண்டாம் பிரிவு லீக் போட்டியில் ஒவோனோவும் டெனெரிஃப் (Tenerife) அணியின் ஜீசஸ் டி மிகுவெல் அலமேடா (Jesus de Miguel Alameda) மோதிக்கொண்டனர்.
படுகாயமடைந்த 30 வயது டி மிகுவெல் மறுநாள் உயிரிழந்தார்.
நடந்ததை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக 25 வயது ஒவோனோ தெரிவித்தார்.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஒவோனோவுக்கு எக்குவடோரியல் கினி (Equatorial Guinea) காற்பந்துச் சம்மேளனமும் சக வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வாரயிறுதியில் நடைபெறவிருந்த டெனெரிஃப், அண்டோரா அணிகளின் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் Copa del Rey, Copa de la Reina போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாளை மறுநாள் (7 நவம்பர்) டி மிகுவெலுக்கு அஞ்சலி செலுத்த டெனெரிஃப் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
அவரது இறுதிச்சடங்கு ஸ்பெயினின் டொலேடோ (Toledo) வட்டாரத்தில் நடைபெறும்.