இறுதி முறையாக மோதிய டென்னிஸ் வீரர்கள் நடால், ஜோக்கோவிச்
டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் ரஃபாயல் நடால் (Rafael Nadal) பல ஆண்டுகளாகத் தமக்குப் போட்டி அளித்த நோவாக் ஜோக்கோவிச்சுக்கு (Novak Djokovic) நன்றி தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் சவுதி அரேபியாவில் நடக்கும் Six Kings Slam போட்டியில் இறுதி முறையாக மோதினர்.
6-2 7-6(5) எனும் செட் கணக்கில் ஜோக்கோவிச் வெற்றி பெற்றார்.
"நமது விளையாட்டில் இருவரும் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் பல. அனைத்துக்கும் நன்றி. பிரமாதமான போட்டி இருந்தது," என்று நடால் சொன்னார்.
நடாலும் ஜோக்கோவிச்சும் மொத்தம் 60 ஆட்டங்களில் மோதியுள்ளனர்.
15 ஆண்டுக்காலத்தில் தாம் சந்தித்த பல்வேறு தடைகளைக் கடக்க ஜோக்கோவிச் உதவியதாக நடால் கூறினார்.
ஜோக்கோவிச்சும் உணர்ச்சிபூர்வமாகப் பதிலளித்தார்.
"டென்னிஸை விட்டுச்செல்லவேண்டாம்...நாம் எத்தனையோ ஆட்டங்களில் சந்தித்திருந்தோம்..."
"என்றாவது ஒரு நாள் கடற்கரையில் அமர்ந்தவாறு வாழ்க்கையைப் பற்றிப் பேச விரும்புகிறேன்," என்று ஜோக்கோவிச் சொன்னார்.
38 வயது நடால் அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் கிண்ண இறுதிச் சுற்றுக்குப் பின் ஓய்வுபெறுவார் என்று எண்ணப்படுகிறது.