$18,000 மதிப்புள்ள தங்க உறிஞ்சு குழல் சாலையில் விழுந்தது
Pexels
சீனாவில் ஆடவர் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட உறிஞ்சு குழலைச் (straw) சாலையில் தவறவிட்டிருக்கிறார்.
அதன் எடை சுமார் 100 கிராம்; மதிப்பு 100,000 யுவான் (சுமார் 18,200 வெள்ளி).
காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு உறிஞ்சு குழல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஷௌ (Shou) என்பவருக்கு bubble tea என்றால் கொள்ளை பிரியம்.
அதை அருந்துவதற்கு அவர் பிரத்யேக உறிஞ்சு குழலை வாங்கினார்.
ஷௌ மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தபோது உறிஞ்சு குழலைக் கால் சட்டைப் பையில் வைத்திருந்தார்.
சாலையில் இருந்த பள்ளத்தைக் கடந்தபோது உறிஞ்சு குழல் கீழே விழுந்தது.
அவர் ஒரு மணி நேரத்திற்கு உறிஞ்சு குழலைத் தேடிப் பார்த்தார்; பயனில்லை.
பின்னர் காவல்துறையின் உதவியை நாடினார்.
விவரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஷௌவுக்கு உதவினர்.
கீழே விழுந்ததால் உறிஞ்சு குழல் சேதமுற்றது.
ஷௌ அதை உருக்கியதாகவும் புதிய உறிஞ்சு குழலை வாங்கவிருப்பதாகவும் கூறினார்.
தம்மிடம் ஒரு வெள்ளி உறிஞ்சு குழல் இருப்பதாகவும் ஷௌ சொன்னார்.
அந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் வேடிக்கையான கருத்துகளைப் பதிவு செய்கின்றனர்.