முட்டை சாப்பிடுவதால் பலன் அதிகமா, தீங்கு அதிகமா?

Unsplash
முட்டை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது என்று கூறி சிலர் அதைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுண்டு....
முட்டை சாப்பிட்டால் பல ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன என்று கூறி சிலர் அதை அதிகமாகச் சாப்பிடுவதும் உண்டு...
முட்டை சாப்பிடுவதால் பலன் அதிகமா, தீங்கு அதிகமா? அது குறித்து ஆராய்ந்தது, The New York Times செய்தி நிறுவனம்.
முட்டையில் உள்ள கொழுப்பு

ஒவ்வொரு முட்டைக் கருவிலும் சுமார் 200 மில்லிகிராம் கொழுப்புச் சத்து உள்ளது.
Low-density lipoprotein (LDL) எனும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களை அடைத்து இருதய நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
முட்டையைச் சாப்பிடுவதால் உடலிலுள்ள ரத்தக் கொழுப்பு அதிகரிக்குமா என்பது குறித்துக் கடந்த 60 ஆண்டுகளாக விவாதிக்கப்படுகிறது.
இருப்பினும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் LDL ரத்தக் கொழுப்பு உண்டாகும் என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை என்று Johns Hopkins பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் துணைப் பேராசிரியரான டாக்டர் செல்வி ராஜகோபால் சொன்னார்.
முட்டைகள் மீது கவனம் செலுத்தாமல் திடக் கொழுப்பு (saturated fat) உணவுவகைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மாமிசம், வெண்ணெய், பாலாடை, தேங்காய் போன்ற உணவு வகைகளில் திடக் கொழுப்பு உள்ளது.
திடக் கொழுப்பை உட்கொள்வதால் உடலில் தீங்கு ஏற்படுத்தும் LDL ரத்தக் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.
'முட்டை சாப்பிடுவதால் பலன் அதிகமா?'

முட்டையில் திடக் கொழுப்பு குறைவாகவும் B, E, D ஆகிய வைட்டமின்கள் அதிகமாகவும் உள்ளன.
குறைவான கலோரிகளில் அதிகமான புரதச்சத்தும் கிடைக்கிறது. முட்டை சாப்பிடுவதால் கண்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பது Northwestern பல்கலைக்கழக Feinberg மருத்துவப் பிரிவின் உணவியல் வல்லுநரான பெத்தனி டுவர்ஃபலரின் (Bethany Doerfler) கருத்து.
இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
ஒரு நாளுக்கு ஒரு முட்டை என்று அளவுடன் சாப்பிடும்படி அவர் பரிந்துரைக்கிறார்.