Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தாண்டு அறுசுவை உணவு - அருமை அறிவோம்!

வாசிப்புநேரம் -

இன்று சித்திரைப் புத்தாண்டு. புத்தாண்டன்று அறுசுவை உணவை உட்கொள்வது தமிழர்களின் பாரம்பரியம்.

இதன் காரணம் வாழ்க்கை என்பது எல்லா சுவைகளையும் உள்ளடக்கியது....அதை ஏற்றுக்கொண்டு நிறைவுடன் வாழவேண்டும் என்பதே என்கின்றனர் மூத்தோர்.

இந்த ஆறு வகையான சுவையே உணவிற்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது.

இனிப்பு

நம்மில் பலரும் விரும்பும் சுவை. அளவாக உட்கொண்டால் உடலுக்கு நல்லது.

பழவகைகள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவை பாரம்பரியமும் ஆரோக்கியமும் நிறைந்த இனிப்புகள்.

புளிப்பு

பலருக்குப் புளிப்பு பிடிப்பதில்லை. இருப்பினும் இச்சுவை தரும் பயன்கள் பல. பசியுணர்வைத் தூண்டி, நரம்புகளை வலுவடையச் செய்யும் சுவை. மிதமிஞ்சிய புளிப்பு உடலுக்குக் கேடு.

மாங்காய், எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றில் புளிப்புச் சுவையை உணர முடியும்.

உவர்ப்பு

உப்புச்சுவையே உவர்ப்பு என அழைக்கப்படுகிறது. உமிழ்நீர் சுரக்க உவர்ப்புச் சுவை உதவுகிறது. இதர சுவைகளைச் சமநிலைப்படுத்துவதும் இதுவே. மிதமான அளவில் உப்பை உட்கொள்ள வேண்டும்.

சுரைக்காய், முள்ளங்கி, பூசணிக்காய், கீரைத்தண்டு, வாழைத்தண்டு முதலியவற்றில் உவர்ப்புச் சுவை அதிகம் உள்ளது.

துவர்ப்பு

சர்க்கரை நோய், வயிற்றுப்போக்கிற்கு சிறந்த மருந்து துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகள். பித்தத்தைச் சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவும்.

மஞ்சள், மாதுளை, வாழைக்காய், கோவைக்காய் ஆகியவற்றில் துவர்ப்புச் சுவை உள்ளது.

கசப்பு

கசப்பு என்றாலே முகம் சுளிப்போம். ஆனால் இதர சுவைகளை விட இதில் இருக்கும் நன்மைகள் அதிகம். நோய் எதிர்ப்புச் சக்தி கசப்புச் சுவை கொண்ட உணவுகளில் அதிகம்.

சுண்டைக்காய், பாகற்காய் ஆகியவற்றில் கசப்பைச் சுவைக்கலாம். இருப்பினும் பாரம்பரியப் பண்டிகை நாட்களில் இவை தவிர்க்கப்படுகின்றன.

புத்தாண்டு தினத்தன்று மருத்துவ குணம் கொண்ட வேப்ப மரத்தின் பூவைச் சிறிது சேர்த்து செய்யப்படும் ரசம் கசப்புக்குச் சேர்க்கப்படுகிறது.

கார்ப்பு

காரச் சுவை கார்ப்பு என அழைக்கப்படுகிறது. இது நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். அதிகமாக காரத்தைச் சாப்பிட்டால் வயிற்றிலும் குடலிலும் புண்கள் ஏற்படும்.

மிளகு, கடுகு, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றில் கார்ப்புச் சுவை அதிகமாக உள்ளது.

அறுசுவை பற்றி தெரிந்துகொண்டோம். இனி என்ன? சுவைத்துப் பார்த்துவிடுவோம்.
 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்